வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (08/07/2018)

`ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மாநில உரிமையை பறிக்கும் செயல்' - திருச்சி சிவா ஆதங்கம்!

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என  திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா 

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சட்ட ஆணையம் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, `நாட்டில் ஜனநாயகமா? பொருட்செலவா? எது முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதால் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும். கூட்டாச்சி தத்துவம்  என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை.  மத்திய அரசு கொண்டு வரும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை கூட்டாச்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சி.  மாநில உரிமைகளையும், கூட்டாச்சி தத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும். தேர்தல் செலவு என்பதை காரணம் காட்டி ஜனநாயகத்தை  சிதைப்பதை திமுக ஏற்காது. மக்கள், தேர்தல் மூலமாக ஆட்சியின் அதிருப்தி காட்டுவார்கள்.  இது போன்ற முன்னெடுப்பு ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்பது இயக்கத்தின் கருத்து'.  என கூறினார்.