வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (08/07/2018)

கடைசி தொடர்பு:17:20 (08/07/2018)

சட்டப்பேரவையில் நாளை தாக்கலாகிறது லோக் ஆயுக்தா சட்ட மசோதா!

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டமசோதா நாளை தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

சட்டப்பேரவை

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த  மே-29ம் தேதி தொடங்கியது. துறைரீதியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள்  நடைபெற்று நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில்,  சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனிடையே மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தி ஜூலை -10 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்தக் காலக்கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. எனவே சட்டப்பேரவையில் இறுதி நாளான நாளை, பேரவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவுகள், சட்ட மசோதாவாக நிறைவேற்றப்பட உள்ளன. இதனுடன் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, லோக் ஆயுக்தா சட்டமசோதா நாளைப் பேரவையில் தாக்கல்செய்யப்பட்டு,  விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது. இதைப் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பேரவையில் தாக்கல் செய்கிறார்.

லோக் ஆயுக்தா

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள், உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழலை விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா அமைப்பு, தன்னிச்சையான அமைப்பாகும்.  மக்கள் கருத்தை கேட்டபின் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில், காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்பாக அவசரமாக மசோதா தாக்கல் செய்யப்படுவது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.