வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (08/07/2018)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டிப் போட்டி; சாலையில் பாய்ந்த 61 ஜோடி மாடுகள்

விளாத்திகுளம் அருகிலுள்ள பூசனூர் கிராமத்தில் காளி அம்மன் கோயில் ஆனித்திருவிழாவினை  முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 61 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகில் உள்ள பூசனூர் கிராமத்தில்  உள்ள  அருள்மிகு ஸ்ரீ செல்வ விநயாகர்,  ஸ்ரீ காளியம்மன் கோயில், ஸ்ரீ தேவி, ஸ்ரீபூமாதேவி சமேத பூர்ண வெங்கடேஸப் பெருமாள் கோயில் ஆனிமாதத் திருவிழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது.  இதில், பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என இரண்டுப் பிரிவுகளில் மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய  மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் 12 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் 15 ஜோடி மாடுகள் பங்கேற்றன.  
8 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 

பெரிய மாட்டு வண்டிப் போட்டி பிரிவில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த கருணாகர ராஜா என்பவரது மாட்டு வண்டி முதல் இடத்தினையும், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவரது மாட்டு வண்டி 2வது இடத்தினையும், தூத்துக்குடி மாவட்டம் பூசனூர் கிராமத்தைச் சேர்ந்த பிர்த்திஷா என்பவரது மாட்டு வண்டி 3வது இடத்தினையும் பிடித்தன. சின்ன மாட்டு வண்டிப் பிரிவில், ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவரது மாட்டு வண்டி முதல் இடத்தினையும், சிங்கிலபட்டி சங்குசாமி என்பவரது மாட்டு வண்டி 2வது இடத்தினையும், தூத்துக்குடி மாவட்டம் மேலதட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த  அய்யனார் என்பவரது மாட்டு வண்டி 3வது இடத்தினையும் பெற்றன. 

பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகள் உரிமையாளர்களுக்கும் வண்டிகளை ஒட்டிய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க