`நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட வேண்டும்!' - அமைச்சர் செங்கோட்டையன் கருத்து | minister sengottaiyan says tn government will discuss with central government about neet exam

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/07/2018)

கடைசி தொடர்பு:19:00 (08/07/2018)

`நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட வேண்டும்!' - அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

`நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ அரசு வலியுறுத்தும்' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

செங்கோட்டையன்

`மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை எடுத்து நடத்தாது. மேலும், நீட், ஜே.இ.இ, யு.ஜி.சி நெட் மற்றும் சிமேட் போன்ற தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமை( National Testing Agency) என்ற அமைப்பு எடுத்து நடத்தும்; ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகள், இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்' என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், `மத்திய அரசு ஒரு திட்டத்தை நடைமுறைப் படுத்தும் போது மாநில அரசிடம் கருத்து கேட்கும். அப்படி, தமிழக அரசிடம் கருத்து கேட்கப்படும் போது, ஆண்டுக்கு ஒருமுறைதான் நீட் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம். எனவே, முதல்வர் மூலம் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும். இதுதொடர்பாக துறை அமைச்சர்களுக்குக் கடிதம் எழுதப்படும். ஓர் ஆண்டுக்கு ஒருமுறை நீட்தேர்வை நடத்தினால்தான் மாணவர்களால் தேர்வு எழுத முடியும்' என்றார்.