தூக்கி வீசப்பட்ட கொடிகள்.. மர்ம நபர்களின் செயலால் அதிர்ச்சியான மக்கள் நீதி மய்யம்..!

கோவையில், மக்கள்  நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டத்துக்காக, வைக்கப்பட்டிருந்த கொடிகளை மர்ம நபர்கள் அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் களத்துக்கு தயராகி வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, கோவை அவிநாசி சாலையில் உள்ள நவ இந்தியாவில் மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக, அவிநாசி சாலையில் ஆங்காங்கே மக்கள் நீதி மய்யத்தின் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று காலை காரில் வந்த சில மர்ம நபர்கள், மக்கள் நீதி மய்யத்தின் கொடியை அகற்றி வீசிவிட்டு சென்றனர். இது அக்கட்சியினரிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம், கமல்ஹாசன் கோவை வந்தபோது, அவிநாசி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை, அமைச்சர் வேலுமணியின் ஆள்கள் சத்தமே இல்லாமல் தூக்கிவிட்டு, தங்களது பேனரை வைத்தனர். இதனால், எந்த பேனரும் கமல் கண்ணில் படாமல், தர்ம சங்கடத்துக்கு ஆளானார்கள்.

அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று மாலை, அ.ம.மு.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், டி.டி.வி.தினகரன் கலந்து கொள்கிறார். இதனால், இதை டி.டி.வி தினகரன் ஆள்கள் செய்தார்களா… அல்லது ஆளுங்கட்சி பிரமுகர்கள் செய்தார்களா, இல்லை வேறு யாரேனும் செய்தார்களா என்று தெரியாமல் மக்கள் நீதி மய்யத்தினர் குழம்பிப் போயுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடைய பேசிய மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த சிலர், "தமிழகம் முழுவதுமே எங்களது கூட்டத்துக்கு, எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. போலீஸாரே, 'உங்க கட்சிக்கு அங்கீகாரமே இல்ல. உங்க கொடி எல்லாம் வைக்க அனுமதி கிடையாது'ன்னு கராறாகச் சொல்கின்றனர். கோவையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக இதுபோன்று நடந்துள்ளது. ஆனால், இதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. காலம் பதில் சொல்லும்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!