வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (08/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (08/07/2018)

உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தருக்குக் கடிதம் மூலம் மிரட்டல்!

உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நீதிபதி சுந்தர் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

நீதியரசர் சுந்தர்  உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி வந்தார். 6 மாத்திற்கு ஒருமுறை நீதிபதிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு நீதியரசர் சுந்தர் மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் சென்னை  கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நீதிபதி சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள், மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி, மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைத் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். அவரை, விரைவில் கண்டுபிடிப்பதாக காவல்துறை ஆணையர் உறுதியளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரெலியாக ஏற்கெனவே போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்புடன் கூடுதல் பாதுபாப்பு, நீதிபதி சுந்தர் வீட்டிற்கு போடப்பட்டுள்ளது. மேலும், நீதிபதிகள்  குடியிருப்பைச் சுற்றி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா என தீவிர கண்காணிப்பிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றர்.