வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (08/07/2018)

கடைசி தொடர்பு:10:42 (09/07/2018)

40 விவசாயிகளுக்கு பட்டுப்புழு தளவாடப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்!

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ.21 லட்சம் மதிப்பில் விலையில்லா பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 40 பயனாளிகளுக்கு வழங்கி, தொழிலைச் சிறப்பாகச் செய்ய ஆலோசனை வழங்கினார். 

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மானிய சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை, அரவக்குறிச்சி, பரமத்தி மற்றும் தாந்தோணிமலை ஆகிய வட்டாரங்களில் ரூ.74.50 லட்சம் மதிப்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியுடன் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டம் 2015-2016 செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டம் மூலம் நடவு செய்யும் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10,500 நடவு மானியமாகவும், சொட்டு நீர் பாசனமுறை அமைக்க, சிறு விவசாயிகளுக்கு ரூ.30,000-ம், ஜி.எஸ்.டி மானியமாகவும், புழு வளர்ப்பு மனை அமைத்ததற்கு ரூ.87,500 மனை மானியமாகவும், ரூ.1000 மதிப்பில் கண்டுணர்வு சுற்றுலாவுடன் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இந்தத் திட்டம் மூலம் 40 பட்டு விவசாயிகளுக்குத் தலா ரூ.52,500 மதிப்பில், ரூ.21 லட்சம் நிதி பயன்பாட்டில் விலையில்லா பட்டுப்புழு வளர்ப்புத் தளவாட பொருள்களான 1 பெட்ரோல் பவர் டில்லர் கருவியும், 1 பிரஸ் கட்டர் கருவியும், 1 கம்பிரசர் பவர் ஸ்பிரேயர், 46 நெட்ரிகா, 1 ஹைக்ரோ மீட்டர், 1 சிக்கேசர், 1 ஹேண்டுலூபர், 1 ஹேண்டு ஸ்பிரேயர் ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டது" என்றார். முன்னதாக, பட்டுவளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்ட பட்டுத்தொழில் கண்காட்சியினை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.