குளத்தில் சோழர்கால கல்வெட்டுக்கள்! உத்திரமேரூர் பொக்கிஷங்கள் | uttiramerur Inscriptions were found in pond

வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (08/07/2018)

கடைசி தொடர்பு:15:34 (09/07/2018)

குளத்தில் சோழர்கால கல்வெட்டுக்கள்! உத்திரமேரூர் பொக்கிஷங்கள்

உத்தரமேரூர் பகுதியில் பழைமையான குளம் ஒன்றைத் தூர்வாரும்போது சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்தப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்தால் இன்னும் நிறையக் கல்வெட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றன. அவற்றின் மூலம் இன்னும் பல வரலாற்றுத் தகவல்களை பெறமுடியும் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

குளத்தில்  சோழர்கால  கல்வெட்டுக்கள்! உத்திரமேரூர் பொக்கிஷங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்திரமேரூர். பல்லவர்களும், சோழர்களும் ஆண்ட தொன்மையான ஊர். இங்குள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் சோழர்கள் ஆட்சிக்கால ஆட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். சோழர்கள் காலத்தில் குடவோலை முறையின் மூலம் கிராம நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி உத்திரமேரூரை ஆட்சி செய்ததை அறியலாம். அதுபோல் ‘வைரமேக தடாகம்’ என்னும் ஏரியைத் தூர்வாரி பராமரித்தது, ஏரிக்கு வாரியம் அமைத்து அதிலிருந்து நீர்ப் பாசன முறைகளை மேற்கொண்டதும் இங்குள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவற்றோடு மாடவீதியார், சேணையார், சங்கர பாடியார் ஆகிய மூன்று வணிகர்கள் இனத்தில் இருந்து பொன்னின் தரத்தைக் கணிப்பதற்கான உறுப்பினர்களையும் இங்கே தேர்ந்தெடுத்ததன் அடையாளங்கள் கல்வெட்டுக்களில் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள் உத்திரமேரூர் கல்வெட்டுகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் உத்திரமேரூர் பகுதியில் தற்போது கிடைத்திருக்கும் கல்வெட்டுகளும் முக்கியமானவை என்கிறார்கள்.

உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் சோமநாதபுரம் பகுதியில் குளம் ஒன்று, பல தலைமுறைகளாக பராமரிப்பின்றி தூர்ந்து கிடந்தது. 'சேவாலயா' என்ற அமைப்பு ஹூண்டாய் க்ளோவிஸ் நிறுவனத்துடன் இணைந்து உத்திரமேரூர் பேரூராட்சியின் மூலம் இந்தக் குளம் தூர்வாரப்பட்டது. குளத்தில் உள்ள மண்ணைத் தூர்வாரி ஆழப்படுத்தியபோது கிழக்குப்பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் கற்கள் மூலம் படித்துறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆடு, மாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக இதுபோன்ற அமைப்பை அக்காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மேலும், அந்தப் படித்துறையில் கல்வெட்டுக்களும் காணப்பட்டன.

உத்தரமேரூர் குளத்தில் கிடைத்த நந்தி, கல்வெட்டு

இதுகுறித்து நம்மிடம் பேசிய உத்திரமேரூர் செயல் அலுவலர் கேசவன், “தண்ணீர் பிரச்னை அதிக அளவில் இருந்த காரணத்தால் இப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வார ஆரம்பித்தோம். சோழர்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட நிறையக் குளங்கள் காணாமல் போய் இருந்தன. இங்கிருக்கும் முதியோர்கள் சொன்ன பிறகுதான் சில குளங்கள் இருந்ததே தெரியவந்தது. ஒவ்வொரு பேருராட்சிக்கும் இரண்டு மூன்று குளங்கள்தான் இருக்கும். ஆனால் இங்கு 48 குளங்கள் இருந்துள்ளது. கடந்த வருடம் மட்டும் 21 தூர்ந்த குளங்களைத் தூர்வாரி இருக்கிறோம். இரண்டு குளங்களை புதிதாக வெட்டி இருக்கிறோம். இந்த ஆண்டு பத்து குளங்களைத் தூர்வார திட்டமிட்டிருக்கிறோம்.  இதுவரை 6 குளங்களைத் தூர் வாரி இருக்கிறோம். சோமநாதபுரம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் போது கிடைத்த கல்வெட்டுக்களை வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தோம். குளத்தின் மேற்கு பக்கத்தில் உள்ள படித்துறையின் இருபக்கங்களிலும் மண் சரிந்து விடாமல் இருக்கக் கற்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதில் கோயிலில் அடித்தளம் பகுதியில் அமைந்திருக்கும் முப்பட்டை வடிவிலான குமுத வரியில் கல்வெட்டு தென்பட்டது. கோயில் அமைப்பதற்குரிய கட்டுமான கற்களும் அந்த இடத்தில் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் சு. இராசகோபால், முனைவர் மார்க்சிய காந்தி ஆகியோர் உதவியுடன்  இந்தக் கல்வெட்டினை தொல்லியல்துறை முன்னாள் கண்காணிப்பாளர்     கி.ஶ்ரீதரன் ஆய்வு  செய்து கண்டெடுத்திருக்கிறார்" என்றார்.

“குளத்தில் காணப்படும் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்லானது, இப்பகுதியில் உள்ள ஏதாவது ஒரு கோயில் கற்களாக இருக்க வேண்டும். முப்பட்ட குமுதவரியில் காணப்படும் கல்வெட்டு பல்லவ மன்னன் கம்பவர்மனின் காலத்தைச் சேர்ந்ததாகும். குளக்கரையில் காணப்படும் கல்வெட்டு கம்பவர்மனின் 26-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஆகும். இம்மன்னன் உத்திரமேரூர் கோயில்களும், வைரமேகதடாகம் என்ற ஏரிக்கும் பெரிதும் தொண்டு செய்துள்ளான். உத்தரமேரூர் பகுதியில் உள்ள சங்கரப்பாடியார் என்னும் எண்ணெய் வணிகக்குழுவைச் சேர்ந்த காஞ்சிபுரம் அரயன் பரமயன் அய்யன் என்பவர் அய்யன் கோயிலையும் மண்டபத்தையும் கட்டியதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சங்கரப்பாடியார் குழுவினர் சொல்ல உத்தரமேரூர் சதுர்வேதிமங்கலத்து பெருந்தச்சன் இக்கல்வெட்டினை பொறித்தான் என்பதை அறியமுடிகிறது. சீரமைக்கப்பட்ட குளத்திற்கு வடக்கே சிவலிங்கமேடு என்ற பகுதியை ஆய்வு செய்தபோது சற்று மேடான பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட நந்தியின் கற்சிற்பமும், சிவலிங்கத்தின் எட்டுப்பட்டை கொண்ட ஆவுடையாரும் காணப்பட்டது. குளக்கரையில் காணப்படும் கற்களை ஆய்வு செய்தால் மேலும் சில கல்வெட்டுக்களும் வரலாற்றுத் தகவல்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இங்குக் கிடைத்த கல்வெட்டுக்கள் குறித்த ஆய்வறிக்கை தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். குளம் வெட்ட வரலாறு கிடைத்திருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்