வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/07/2018)

கடைசி தொடர்பு:09:56 (09/07/2018)

ஜான் பாண்டியன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! - நெல்லையில் பதற்றம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஜான் பாண்டியன்

நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளைப் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரான ஜான் பாண்டியன் வீடு உள்ளது. அவரது வீட்டின் முன்பாக எப்போதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், இன்று இரவு ஜான் பாண்டியன் வீட்டின் உள்ளே இருந்தார். போலீஸாரும் வழக்கமான பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அப்போது, பைக்கில் வந்த மர்மக் கும்பல் திடீரென ஜான்பாண்டியன் வீட்டின் உள்ளே பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். போலீஸார் ஓடி வந்ததும் அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பியது. அப்போது ஒரு பைக்கை மட்டும் அங்கு விட்டுத் தப்பி ஓடிவிட்டனர். அந்த பைக்கை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம நபர்கள் வீசிய இரு பெட்ரோல் குண்டுகள், மதில் சுவரிலும் மரத்திலும் பட்டு கீழே விழுந்தது. விளம்பர போர்டு வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடும் என போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.