இடைத் தரகர்கள் பிடியில் தாலுகா அலுவலகம்! - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு | DMK ex MLA slams ADMK government

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:09:47 (09/07/2018)

இடைத் தரகர்கள் பிடியில் தாலுகா அலுவலகம்! - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

    

``கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள கடவூர் தாலுகா அலுவலகம் இடைத்தரகர் பிடியில் உள்ளது. அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்" என்று கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ பி.காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ்இதுபற்றி நம்மிடம் பேசிய அவர், ``கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இருக்கிறது கடவூர் தாலுகா. கரூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால், எந்த அரசு நலத்திட்டங்களையும் இங்கே கொண்டு வருவதில்லை. தி.மு.க ஆட்சிமாற்றம் ஏற்பட்டு 7 ஆண்டுகளில் கடவூருக்கும், ஏன் நான் எம்.எல்.ஏவாக இருந்த கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கும் எந்தவொரு திட்டப்பணிகளும் செய்யப்படவில்லை. இந்தத் தொகுதியின் இப்போதைய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கீதா, தன்னோட சம்பாத்தியத்தில் மட்டும் குறியாக இருக்கார். தொகுதிக்காக எதையும் செய்வதில்லை.

கடவூர் தாலுகா அலுவலகம் இடைத்தரகர் பிடியில் உள்ளது. அப்பாவி மக்களை அங்கே அலைக்கழிக்கிறார்கள். அங்குள்ள அதிகாரிகள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். நான் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய காலகட்டத்தில் இப்பகுதிக்கும், தொகுதிக்கும் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, மாயனூர் தடுப்பணை, காணியாளம்பட்டி பாலிடெக்னிக், தரகம்பட்டி மாதிரிப்பள்ளி, பத்திரப்பதிவு அலுவலகம்,நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், கடவூர் எனும் பெயரை மையமாகக் கொண்டு தனி தாலுகா,தொகுதி முழுவதும் 68 ஆரம்பப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும்,12 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. ரூ.30 கோடி செலவில் வகுப்பறைகள், கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 40-க்கும் மேற்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடை திறக்கப்பட்டது. பாலங்கள், சாலை வசதி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்று நடைபெறும் ஆட்சி மக்களை ஏமாற்றும் ஆட்சியாக இருக்கிறது.
 தி.மு.க ஆட்சி மாறிய கடந்த ஏழாண்டுகளாக தொகுதிக்கும், கடவூர் பகுதிக்கும் இப்போதைய எம்.எல்.ஏ எதுவும் செய்யவில்லை. எங்கேயும் மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை. செயலற்ற ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடவூரில் தனி தாலுகா அறிவிக்கப்பட்டும், அதற்காக வரவேண்டிய நீதிமன்றம், வங்கி, மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட 7 ஆண்டுகளில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இந்த அ.தி.மு.க ஆட்சியில், தி.மு.க ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்டு ஆட்சிமாற்றத்தால் கடவூர் பகுதியில் அமைய இருந்த கல்லூரியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேறு இடத்துக்கு மாற்ற முயல்கிறார். எனது கோரிக்கையில் நிறைவேற்றப்பட்ட 2 அரசுப் பேருந்துகளை இப்போது ஓடவிடாமல் முடக்கி இருக்கிறார்கள் அமைச்சரும், எம்.எல்.ஏவும். தொகுதி வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்காததைக் கண்டித்து தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தலாம்ன்னு இருக்கோம்" என்றார்.