வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (08/07/2018)

கடைசி தொடர்பு:09:42 (09/07/2018)

குமரி கோழிப்பண்ணையில் போலி மதுபான குடோன்! - கண்டுபிடித்த கேரள போலீஸ்!

கேரளா போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் பாதாள அறையில் செயல்பட்ட போலி மதுபான குடோனை குமரி மாவட்ட போலீஸார் கண்டுபிடித்தனர்.

பாதாள அறை

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் மற்றும் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குப் போலி மதுபானங்களும் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கேன்களில் அடைத்து கடத்தி வரப்படும் எரிசாராயங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. பின்னர், அவை பாட்டிலில் அடைக்கப்பட்டு ஒரிஜினல் மதுபானங்களைப் போன்று கேராளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதுபற்றி குமரி மாவட்ட காவல்துறையினருக்குத் தகவல் தெரியவில்லை. ஆனால், குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு மதுபானங்கள் வருவதாகவும், அந்த குடோன்கள் செயல்படும் இடங்கள் குறித்தும் கேரள போலீஸார் குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

போலி மதுபான குடோன்

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு போலீஸார் நாகர்கோவில் அருகே பொட்டல் பகுதியில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் இன்று சோதனை செய்தனர். அங்கு பூமிக்கு அடியில் பாதாள அறையில் ரகசியமாக அமைக்கப்பட்ட எரிசாராயக் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 லிட்டர் எரி சாராயம், எரி சாராயத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 70 லிட்டர் போலி மதுபானம், 5 ஆயிரம் மது பாட்டில்கள் மற்றும் போலி மது தயாரிக்கும் உபகரணங்கள், தமிழக அரசின் டாஸ்மாக் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருள்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோழிப்பண்ணையில் வேலை செய்துவந்த  துத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலி மதுபான குடோன்

வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரும் எரிசாராயங்களை இங்குள்ள குடோனில் வைத்து போலி மதுவாக தயாரித்து அதனை கேரளாவுக்கு கடத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோழிப்பண்ணையை நடத்தி வந்த செந்தில் மற்றும் போலி மது தயாரித்த சிலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரகசிய மதுபான ஆலை செயல்பட்டு வருவது அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.