புயல், மழை, வெள்ளம்... தாய்லாந்துக் குகையில் 4 சிறுவர்களை மீட்ட திக், திக் நிமிடங்கள்!

தாய்லாந்து வீரர் மரணமடைந்த அந்த குகைப் பகுதியின் வழியாகதான் இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டிய சூழல் இருந்துள்ளது.

மழை இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. அடுத்து வரும் நாள்களில் புயல் வரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக் கடுமையாகும். தாய்லாந்துக் குகைக்குள் சிக்கியிருக்கும் 12 கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோரை மீட்கும் பணியில், 08-07-2018 அன்று 4 கால்பந்தாட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இரவு நேரம், கொட்டும் மழை, மீட்புப்படையினருக்கான திட்டமிடல் நேரம் போன்ற அவசியக் காரணங்களால், மீட்புப் பணி சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழு அறிவித்துள்ளது. இன்று (09-7-2018) காலை முதல் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தாய்லாந்து குகை மீட்பு

கடந்த ஜூன் 23-ம் தேதி, தாய்லாந்தில் 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேரும் அவர்களின் பயிற்சியாளர் ஒருவரும் "தாம் லுவாங்" எனும் குகைக்குள் சென்றனர். தங்கள் குழுவிலிருக்கும் ஒரு பையனின் பிறந்தநாளைக் கொண்டாட தாய்லாந்து - மியான்மர் எல்லையிலிருக்கும் அந்தக் குகைக்குச் சென்றனர். அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால், அவர்கள் அனைவரும் அந்தக் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 

உடனடியாக தொடங்கப்பட்ட மீட்புப் பணியில், கடந்த ஜூலை 6-ம் தேதி தாய்லாந்தின் கப்பற்படையைச்  (Navy SEAL) சேர்ந்த வீரர் ஒருவர் இறந்து போனார். 13 வெளிநாட்டு "டைவர்களும்" (Divers), 5 தாய்லாந்து கப்பற்படை வீரர்களும் நேற்று 4 சிறுவர்களை மீட்டுள்ளனர். அது அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது. குறிப்பாக, தாய்லாந்து வீரர் மரணமடைந்த அந்த குகைப் பகுதியின் வழியாகத்தான் இவர்களை மீட்டு கொண்டு வர வேண்டிய சூழல் இருந்துள்ளது. பெரும் போராட்டத்திற்கிடையே அவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். 

தாய்லாந்து குகை

உலகம் முழுக்க பல நாடுகளும் தாய்லாந்துக்கு உறுதுணையாக இந்த மீட்புப் பணியில் உடன் நிற்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பு தன் ட்வீட்டில் `` தாய்லாந்து மீட்புக் குழுவின் செயல்பாடுகளை அமெரிக்க நெருங்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் மிகவும் தைரியத்தோடும், வீரத்தோடும் செயல்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார். 

தாய்லாந்து குகை மீட்புப் பணிகள்

நீருக்கும், நேரத்துக்குமான போராக இந்த மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பது தான் உலகில் இருக்கும் அனைவரின் பிரார்த்தனைகளாகவும் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!