வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:08:20 (09/07/2018)

ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால மெயின் அருவி.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தடை, குற்றாலம்

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மெயின் அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

குற்றாலத்தில் சமீபமாக சீசன் களைகட்டத் தொடங்கியிருந்தது. கடந்த ஒருவாரமாக சாரல் மழையும் பெய்யாததால் குற்றால அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்குப் படையெடுக்கத் தொடங்கினர். விடுமுறை தினமான நேற்று காலை குற்றால மெயின் அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலாவாசிகள் வரிசையில் காத்திருந்து குளிக்கத் தொடங்கினர்.

நேரம் செல்லச் செல்ல மெயின் அருவியில் வரிசை நீண்டு காணப்பட்டது. ஐந்தருவி, குற்றால பழைய அருவி, புலியருவியிலும் இதே நிலைதான். இந்த அருவிகளில் பெண்கள், குழந்தைகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருந்தது. இந்நிலையில், பின்மாலை முதலே வானிலை மாறத்தொடங்கியிருந்தது. மிதமான சாரல் மழையும், காற்றும் வீசத் தொடங்கியிருந்தது. இந்நிலையில், குற்றால மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.