இந்த ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும் – சீறும் ஜெ.தீபா

திருச்சியில் நடந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்திருந்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, திருச்சி  மத்திய  பேருந்துநிலையம்  அருகே உள்ள ஹோட்டல்  ஒன்றில்  பத்திரிகையாளர்களைச்  சந்தித்தார்.

தீபா

அப்போது தீபா, 'ரஜினி, கமல் தனித்தனியாக கட்சி தொடங்கி உள்ளனர். தேர்தல் வந்தால்தான் அவர்களை மக்கள் ஏற்றுகொண்டார்களா? என்பது தெரிய வரும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைப் பற்றி பேசினாலே கைது செய்யக்கூடிய நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. 8 வழிச்சாலை திட்டம் என்பது தேவையற்றது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை அரசு சார்பிலோ, தனியார் அமைப்புகளோ நேரில் சென்று விரிவான கள ஆய்வு நடத்த வேண்டும்.

முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை நான் சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமாக நடந்தது. அதன்பிறகு என்ன காரணத்தாலோ எனது பக்கம் வந்த அ.தி.மு.க. தொண்டர்களை எல்லாம் அவர் பக்கம் இழுத்துக்கொண்டார். ஒருவகையில் என்னை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். குட்கா ஊழல் உள்பட அனைத்து ஊழல்கள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் மட்டுமல்ல. தமிழகத்தில் அனைத்து சம்பவங்களுமே மக்களை அடிமைப்படுத்துவதுபோல் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, அரசுகளால் தீட்டப்படும் திட்டங்கள் அனைத்துமே மக்கள் விரோத திட்டங்களாக தான் இருக்கிறது. நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மருத்துவக்கல்வி உயர்ந்த இடத்தில் இருந்தது. தற்போது அது கீழே இறங்கி விட்டது. தற்போது மத்திய-மாநில அரசுகள் சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சி நடத்துகின்றன.

தமிழகத்தில் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. அவ்வாறு நடந்தால் அது சர்வாதிகார ஆட்சியாகதான் இருக்கும். ஜனநாயக ஆட்சியாக இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் வரும்போது அறிவிப்பேன்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!