வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:10:20 (09/07/2018)

உயரும் குழந்தைக் கடத்தல் எண்ணிக்கை..! - அதிர்ச்சி தரும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை!

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டில் தோராயமாக 55,000 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில், `40.4 சதவிகித குற்ற வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன' என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தை கடத்தல்

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 2016-ம் ஆண்டில், நாடு முழுவதும் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். கடந்த 2015-ம் ஆண்டில் 41,893 குழந்தைகள்; 2014-ம் ஆண்டில் 37,854 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைக் கடத்தல் தொடர்பாக 40.4 சதவிகித குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016-ல் ஆள் கடத்தல் சம்பந்தமாக 8,132 வழக்குகள் நாடுமுழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான குழந்தைக் கடத்தல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் அந்த அறிக்கையில், ``குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,06,958 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2015-ம் ஆண்டை விட 13.6 சதவிகிதம் அதிகம். இதுமட்டுமல்லாமல்,  சமூக வலைதளங்களில் பரவும் குழந்தைக் கடத்தல் வதந்தியால் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்” என்ற தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது.