வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:12:20 (09/07/2018)

வீட்டு விசேஷத்துக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு நடந்த சோகம்!

காசர்கோட்டில் லாரியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

5 பேர் விபத்தில் பலியான சோகம்

மங்களூரிலிருந்து கொச்சி நோக்கிச் சென்ற நேஷனல் பெர்மிட் லாரியும் காசர்கோட்டிலிருந்து கர்நாடகாவுக்குச் சென்ற ஜீப்பும் இன்று காலை நேருக்கு நேர் மோதியது. முன்பக்க சக்கரம் வெடித்ததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது மோதியதாக கூறப்படுகிறது. ஜீப்பில் இருந்த கர்நாடக மாநிலம் உள்ளாளியைச் சேர்ந்த பாத்திமா (65), முஸ்தாக் (45), நஸீமா (38), அஸ்மா (30), இம்தியாஸ் (28) ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். நான்கு குழந்தைகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

நான்கு பேருக்கும் மங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் ஜீப்பின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியதை அடுத்து இறந்தவர்களின் உடலை மீட்பதற்கு காலதாமதம் ஆனது. ஜீப்பை உடைத்து உடல்கள் மீட்கப்பட்டன. 1 மணிநேர முயற்சிக்குப் பிறகே ஜீப் டிரைவரின் உடலை மீட்கமுடிந்தது. பாலக்காட்டில் வசிக்கும் பாத்திமாவின் மகள் வீட்டு புதுமனை புகுவிழாவுக்குச் சென்று திரும்பியபோதுதான் இந்த பயங்கர விபத்து நடந்திருக்கிறது.