`சோற்றுக்குப் பதில் மண்ணைச் சாப்பிடுகிறோம்'- கல்குவாரியால் கண்ணீர்விடும் கிராம மக்கள் | quarry has been affected the village the environment

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:12:40 (09/07/2018)

`சோற்றுக்குப் பதில் மண்ணைச் சாப்பிடுகிறோம்'- கல்குவாரியால் கண்ணீர்விடும் கிராம மக்கள்

``எங்கள் பகுதியில் இருக்கும் கிரஷர் மற்றும் குவாரிகளால் நாங்கள் தினம் தினம் சோற்றுக்குப் பதிலாக மண்ணைச் சாப்பிடுகிறோம். எங்கள் குழந்தைகள் பலவிதமான நோய்களால் அவதிப்படுகிறார்கள். தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் இல்லை. எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்'' என்று மூன்று கிராம மக்கள், ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்திருக்கிறார்கள்.

கிராம மக்களை பாதிக்கவைக்கும் கல்குவாரி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவளக்குறிச்சி, இரூர், பாடாலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிராம மக்கள், ``திருவளக்குறிச்சி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் தொழில் விவசாயம். கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சரோஜா, ஜெயவிலாஸ், சுவேதா, ராமஜெயம், சக்தி போன்ற கிரஷர்கள் இயங்கிவருகின்றன. இதில் மிகவும் மோசமானது சுவேதா குரூப்ஸ் என்கிற கல்குவாரி நிறுவனம். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கிரஷர் இரவு பகல் என்று பாராமல் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வசிக்கவே முடியவில்லை. எந்த நேரமும் புழுதி காற்றில் பறக்கிறது. மக்கள் மூச்சுவிட முடியாமல் நோய் வாய்ப்பட்டு தினமும் சாகிறார்கள்.

கல்குவாரியால் பாதிக்கப்படும் கிராம மக்கள்

அதுமட்டுமில்லாமல் சாப்பிட உட்கார்ந்தால் சோற்றில் தூசி வந்து விழுகிறது. நிம்மதியாக உழைத்துச் சாப்பிடகூட முடியவில்லை. கிரஷருக்குப் பாதுகாப்பு வசதியே கிடையாது. கல் உடைக்கும் புழுதி காற்றில் பரவாமல் இருக்கப் பல நிபந்தனைகள் இருக்கிறது. ஆனால், இந்த நிறுவனம் எதையுமே பின்பற்றுவதே இல்லை. அதுமட்டுமில்லாமல் கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள மலைகளிலிருந்து வரும் தண்ணீர் ஏரிக்கு வந்தடையும். இந்த ஏரி தண்ணீரைக் கொண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஏரிக்கு மழை நீர் செல்லும் நீர்வழிப்பாதையை இக்குவாரி தரப்பினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், ஏரி வறண்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகளை உடைக்க இரவு நேரங்களில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இக்குவாரியால் கிராமம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கல்குவாரிகளை இயங்கத் தடைவிதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் பார்வையிடுவதுபோல் பார்வையிட்டு அவர்களது பாக்கெட்டை நிரப்பிவிட்டுச் செல்கிறார்கள். நாங்கள் இறுதியாக ஆட்சியரிடம் புகார்  தேவேந்திரன்கொடுத்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்தக் குவாரியை நாங்களே அடித்து உடைக்கப்போகிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள்தான் தீர்மானிக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார்கள்.

சுவேதா குரூப் உரிமையாளர் தேவேந்திரனிடம் பேசினோம். ``நாங்கள் எந்தவிதத்திலும் அரசின் விதிகளை மீறவில்லை. இது ஆடி மாதம் காற்று காலம் என்பதால்தான் தூசி பறக்கிறது. இதற்கு நாங்கள் என்ன பண்ணமுடியும்'' என்று அலட்சியமாகப் பேசினார்.

பெரம்பலூர் ஆட்சியர் சந்தாவிடம் பேசினோம். ``இம்மாவட்டத்தில் செயல்படும் சில குவாரிகளுக்கு ரினிவெல் செய்யும் உரிமத்தை கட்பண்ணியிருக்கிறோம். இந்தக் குவாரியைப் பற்றி மக்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். விசாரணை செய்துவிட்டு தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்தார்.