`ஒரு தினகரனையே ஒன்றும் செய்ய முடியவில்லை!' - பிரமாண்ட கூட்டத்தில் அதிர்ந்த தினகரன்

 கோவை பிரமாணட கூட்டத்தில் பேசிய தினகரன்

``ஒரு தினகரனையே  எதிர்கொள்ள முடியவில்லை. இதில் ஆயிரம் தினகரன் வந்தாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். துரோகக் கும்பல் சட்டசபையைக் காலி செய்யும் நேரம் வந்துவிட்டது. உப்பைத் திண்றவர்கள் தண்ணீர்குடிக்கும் நேரம் வந்துவிட்டது'' என்று கோவையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் முழங்கியிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

கோவை கொடிசியா வளாகத்தில் நேற்றிரவு அம்மா மக்கள் முன்னேற்றக்கழத்தின் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்தப் பெரிய திடலில்  டி.டி.வி.தினகரன் தரப்புக்கு அதிக அளவில் கூட்டம் கூடிவிடக்கூடாது என்று ஆளும்தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது. அதற்காக சில உள்ளடி வேலைகளையும் பார்த்தார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி திரண்டுவிட்டது தினகரனுக்கான கூட்டம். கூட்டம் முடிவடைவதற்குள்ளே தினகரனுக்குக் கூடிய கூட்டத்தை வைத்து ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும் கலாய்த்து  மீம்ஸ்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. வழியெங்கும் ப்ளெக்ஸ்கள். தாரை தப்பட்டைகளோடு வரவேற்பு என விழா பிரமாண்டமாக இருந்தாலும் சிம்பிளாக வந்து, பேச ஆரம்பித்தார் தினகரன். 

கூட்டத்தில் அவர் பேசும்போது, ``நியாயத்தின் பக்கமும் நீதியின் பக்கமும் நிற்கக்கூடியவர்கள் கொங்கு மண்டல மக்கள். இந்த மண்ணிலே பிறந்த சிலர் தாங்கள் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்தபோது செய்த தவறுகளால் மடியிலே கணம் இருக்கும் பயத்தினால்,  `யாருக்கோ... பயந்துகொண்டு’  தன்னை முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்து கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு வந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.  அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற இந்த இயக்கம் உருவாகி வளர்ந்து வருகிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் சொல்கிறார், ‘ஒரு தினகரன் அல்ல. ஆயிரம் தினகரன் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது’  என்று. ஆர்.கே நகரில் இந்த ஒரு தினகரனையே உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை. இரட்டை இலைச் சின்னம், கட்சியின் பெயர், ஆட்சி அதிகாரம் எல்லாத்தையும் வைத்துக்கொண்டு வீடுவீடாக பிள்ளைப் பிடிப்பவர்கள்போல அலைந்தும் டெபாசிட் பெறுவதற்கு நீங்கள் போட்ட தோப்புக்கரணம் எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு கொங்குமண்டலமே இங்கு திரண்டிருக்கிறது இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதால் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் மாமியார் வீட்டுக்குப் போகப்போவதாக என்னைப் பார்த்துச் சொல்கிறார்கள். யார் மாமியார் வீட்டுக்குப் போகப்போகிறார்கள் என்பது விரைவில் தெரியும். திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ஆரம்பித்துவிட்டது. முட்டை ரூபத்தில் வந்துவிட்டது.  உப்பைத் திண்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. என்னை  வெளியேறச் சொன்னவர்கள் அரசியலிலிருந்தே வெளியேறும் காலம் வந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தொண்டர்கள் பதில் கொடுப்பார்கள். நீதிமன்றம் பதில்கொடுக்கும். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வரும். துரோகக் கும்பல் சட்டசபையைக் காலி செய்யும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்ளதான் இந்தக்கூட்டம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!