டெல்லியில் 11 பேர் மர்ம மரணம்! - கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மான முறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டபோது ஒருவர் மட்டும் உயிர் பிழைக்கப் போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மர்ம மரணம்

`ஹாரர் சீரிஸ்' போல ஆர்வமும் மர்மமும் கலந்தபடியே நீடிக்கிறது டெல்லியில் நடைபெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணம். கொலையா,  தற்கொலையா? என்ற ரீதியில் காவல்துறை விசாரணையில் இறங்கியது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையில், மூதாட்டி மட்டும் தரையில் கிடந்தபடி உயிரிழந்துள்ளார். அவர்கள் வீட்டிலேயே கோயில் கட்டி வழிபாடு நடத்தியது தெரியவந்தது. ஒருவேளை மூடநம்பிக்கையால் தங்களைத் தாங்களே தூக்கிட்டுக் கொண்டிருப்பார்கள் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. மேலும் `தற்கொலைதான் சொர்க்கத்தை அடைய ஒரே வழி' என்று அந்த வீட்டில் கிடந்த துண்டுக் காகிதங்களில் எழுதப்பட்டுள்ளது. அதே வீட்டில் 11 டைரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குடும்பம்

 

அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விடைகிடைக்காத சூழலில், அந்த வீடு குறித்து பேய் வீடு என அக்கம் பக்கத்தினர் பேசி வருகின்றனர். மேலும், பயன்படுத்தப்படாத 11 குழாய்கள் வீட்டுக்கு வெளியில் நீண்டுகொண்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு மர்மங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில், போலீஸாரின் கவனம் இறந்த லலித் சுண்டவத் என்பவரை நோக்கி திரும்பியுள்ளது. அவர் பயன்படுத்திய மொபைல் போனில் அமானுஷ்யம் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பிலும் இணையத்திலும் தேடியுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மரணமடைந்த 11 பேரில் புவனேஷ் என்பவர் கடைசி நேரத்தில் அவர் தன் கையைக் கொண்டு தன் கழுத்தில் மாட்டப்பட்ட தூக்குக் கயிரைப் பிடித்து இழுத்திருக்க வாய்ப்புள்ளதாக தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக நீண்டுகொண்டே செல்கிறது டெல்லியில் நடைபெற்ற மர்ம மரணம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!