சிறையில் போலீஸ் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி! கலங்கடித்த சுனில் ரதி

உத்தரப்பிரதேசம் பாக்பத் சிறையில் பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி, சக ரவுடி ஒருவரால் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நிலையில், முன்னா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரவுடி முன்னா பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்ட சிறை

(Photo Credit - ANI)

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடிதடி, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் தன் கைவரிசையைக் காட்டி, கேங்ஸ்டராக வலம் வந்தவர் தாதா முன்னா பஜ்ரங்கி. இந்நிலையில், கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் முன்னாவுக்குத் தொடர்புள்ளதாக அவரைக் கைது செய்த போலீஸார் ஜான்சி சிறையில் அடைத்தனர். மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ கிருஷ்ணன் ராய் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக, ஜான்சி சிறையிலிருந்து பாக்பத் மாவட்ட சிறைக்கு கடந்த 8-ம் தேதியன்று முன்னா மாற்றப்பட்டார். 

இதையடுத்து, இன்று காலை 6.30 மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்காக அவரை வெளியே அழைத்து வந்தனர் போலீஸார். அப்போது, சிறையிலிருந்த மற்றொரு ரவுடி சுனில் ரதி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து முன்னாவை நோக்கிச் சரமாரியாக சுட்டார். இதில், சம்பவ இடத்திலேயே முன்னா உயிரிழந்தார். முன்னதாக, கடந்த 29-ம் தேதியன்று முன்னா பஜ்ரங்கியின் மனைவி, தனது கணவர் மீது போலி என்கவுன்ட்டர் நடத்திக் கொலை செய்ய சதித்திட்டம் திட்டப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார். 

முதல்வர் யோகி ஆதித்யநாத்

(Photo Credit - ANI)

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், `சிறை வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். துப்பாக்கிச்சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!