டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள்: நெல்லையில் ஜூலை 11-ம் தேதி தொடக்கம்!

இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன், வரும் 11-ம் தேதி நெல்லையில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. 

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நெல்லையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (11-ம் தேதி) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை, காஞ்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம், நெல்லை இந்தியா சிமென்ட்ஸ், திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளன. மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மைதானங்களில் தலா 14 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 ஆட்டங்களும் நடக்க இருக்கின்றன. இந்தப் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு ஏற்கெனவே நடைபெற்ற நிலையில் போட்டிக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பாக நடக்கும் நிகழ்ச்சியில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்துகொள்கிறார்கள்.  

இந்தப் போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 60 லட்சம் ரூபாயும் 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 40 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளில் பங்கேற்கும் பிற 4 அணிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டிகள் குறித்துப் பேசிய, இந்திய அணியின் வீரரும் சென்னை சேப்பாக்கம் அணியின் கேப்டனுமான அஸ்வின், ``டி.என்.பி.எல் போட்டிகளில் மாவட்ட அளவிலான வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதனால், அவர்களின் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புக் கிடைக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற பல வீரர்களுக்கு ஐ.பி.எல் ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, தூத்துக்குடி அணிக்கு விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்த அளவுக்கு இந்தப் போட்டியால் கிராமப் பகுதிகளில் உள்ள திறமையான வீரர்களுக்கு பலன் கிடைக்கிறது’’ என்றார். 

தொடக்க ஆட்டம் 11-ம் தேதி நெல்லையில் நடைபெற உள்ள நிலையில், சங்கர் நகர் இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் இன்று டிக்கெட் விற்பனை தொடங்கியது. 50 ரூபாய் விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், ஒரு நபருக்கு இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!