வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (09/07/2018)

கடைசி தொடர்பு:14:53 (09/07/2018)

`நானும் பச்சையப்பா கல்லூரி மாணவர்தான்' - அதிரவைத்த இன்ஸ்பெக்டர் 

திருத்தணி அருகே உள்ள சிறுகுமி கிராமத்தில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் உட்பட மாணவ, மாணவிகள் இன்று காலை அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சிறுகுமி கிராமத்திலிருந்து திருத்தணி, சென்னைக்கு ஏராளமானவர்கள் கல்வி, வேலைவாய்ப்புக்காக பேருந்தில் வருகின்றனர். சிறுகுமி கிராமத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை குறுகி காணப்படுவதால் அரசுப் பேருந்து அங்கு செல்வதில்லை. இதனால் சுமார் 7 கி.மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளதாக அந்தக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  சாலையை விரிவாக்கம் செய்தால் மட்டுமே அரசுப் பேருந்துகளை இயக்க முடியும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் சாலை விரிவாக்கம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இன்று காலை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி சிறுகுமி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாகச் சென்ற 5 அரசுப் பேருந்துகள், 7 பள்ளிப் பேருந்துகள் ஆகியவற்றை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைப்பிடித்தனர்.

இந்தத் தகவல் கிடைத்ததும் திருத்தணி இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீஸார் அங்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், `நானும் பச்சையப்பா கல்லூரி ஸ்டூடண்ட்தான்' என்று பேசி அவர்களை சமரசப்படுத்தினார். இதனால் இரண்டு மணி நேரம் நடந்த போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் அவ்வழியாக இயக்கப்பட்டன. 

போராட்டம் குறித்து மாணவர்கள் கூறுகையில், ``சிறுகுமி கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலை 30 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. ஆக்கிரமிப்பு காரணமாக அந்த அளவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் எங்கள் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சரியாக வருவதில்லை. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்திலேயே கல்வி வளர்ச்சியில் முன்னேறிய கிராமத்தில் மக்களின் அடிப்படை வசதிகள்கூட மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்காமல் இழுத்தடித்துவருகிறது" என்றனர். 

பேருந்துகள் சிறைப்பிடிப்பு போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பரந்தாமனின் சாதூர்யமான பேச்சால் மாணவர்கள் அமைதியாகியது குறிப்பிடத்தக்கது.