வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (09/07/2018)

கடைசி தொடர்பு:15:54 (09/07/2018)

சேலம் 8 வழிச்சாலை தொடக்கம் முதல் இன்று வரை... என்ன என்ன நடந்திருக்கின்றன?

அடிமலைப்புதூரில் நில அளவை செய்யும் போது உன்னாமலை என்ற வயதான பாட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பாட்டியையும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி மாலை வரை வைத்திருந்து நில அளவை முடித்த பிறகு அனுப்பினார்கள்.

சேலம் 8 வழிச்சாலை தொடக்கம் முதல் இன்று வரை... என்ன என்ன நடந்திருக்கின்றன?

சேலம் டு சென்னை 8 வழிச் சாலை 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படவுள்ளது. இச்சாலை சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி சென்னை வண்டலூர் வரை மொத்தம் 277 கி.மீட்டர் போடப்படவிருக்கிறது. சேலம் மாவட்டத்தில் வனப்பகுதி 16 ஹெக்டேரும், அரசு புறம்போக்கு 46 ஹெக்டேரும், தனியார் பட்டா நிலம் 186 ஹெக்டேர் என மொத்தம் 248 ஹெக்டேர் நிலத்தை 853 பட்டாதாரர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த 8 வழிச் சாலையில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த சேலம் மாவட்ட வருவாய் துறையினர் 5 யூனிட்டுகளாகப் பிரிக்கப்பட்டு 5 சிறப்பு நில எடுப்பு வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

 8 வழிச்சாலை

முதற்கட்டப் பணி:

இச்சாலை அறிவிக்கப்பட்டு வழித் தட வரைபடம் வெளியிடப்பட்ட தினத்திலிருந்தே விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதை மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகம் சிறிதளவும் பொருட்படுத்தாமல் தங்களுடைய முதற் கட்டப் பணியாக நில அளவை செய்து முட்டுக்கல் நடும் பணியைக் கடந்த மாதம் 18ம் தேதி சேலம் மாவட்டத்தின் எல்லையான மஞ்சவாடி கனவாயில் தொடங்கியது.

அடிமலைப்புதூரில் நில அளவை செய்யும் போது உன்னாமலை என்ற வயதான பாட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பாட்டியையும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி மாலை வரை வைத்திருந்து நில அளவை முடித்த பிறகு அனுப்பினார்கள். நில அளவை செய்யும் போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டும் பட்டாதாரர்களை தவிர மற்றவர்கள் யாரும் நில அளவை செய்யும் இடத்துக்கு வரக் கூடாது என்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என்றும் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் காவல் துறையினர் மறைமுகக் கட்டளையிட்டிருந்தார்கள். மீறிச் செயல்பட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி மாலை வரை வைத்திருந்து அனுப்பினார்கள்.

சுமார் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கொடுமைகளுக்கு உள்ளானார்கள். நில அளவை செய்யும் பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடைச் சட்டம் போடப்பட்டதைப் போல இருந்தது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த முத்துக்குமார், வளர்மதி, பியூஸ்மானுஷ், போன்றவர்கள் கைதும் நடைபெற்றது. இப்படி 18ம் தேதி தொடங்கிய முதற்கட்டப் பணி விவசாயிகளின் கதறலும், கண்ணீருக்கும் இடையே கடந்த மாதம் 25ம் தேதி நிறைவு பெற்றது.

சேலம் விவசாயிகள்

இரண்டாம் கட்டப் பணி:

இரண்டாம் கட்டப் பணியாக ஹெலிகாம் பறக்க விட்டு முட்டுக்கல் நடப்பட்ட பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது. முதற்கட்டப் பணியிலேயே விவசாயிகளின் கதறல்களையும், கண்ணீரையும் மீடியாக்களில் வெளியிட்டு பெரும் பிரச்னைகள் ஏற்பட்டதால் இரண்டாம் கட்டப் பணியை சைலென்டாக நடத்தினார்கள். முதலில் வனப்பகுதியில் 26ம் தேதியே தொடங்கினார்கள். பிறகு பட்டா நிலத்தில் ஹெலிகாம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட போதே பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவந்தது. பாரப்பட்டி பகுதிகளில் ஹெலிகாம் பறக்கும் போது அதிகாரிகளை விவசாயிகள் சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்து ஹெலிகாம் பறக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும் போது 8 வழிச் சாலையை நிறுத்தவும், நிலங்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவும் மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில் குள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்குத் தங்கள் கால்நடைகளான ஆடு, மாடு, கோழி, நாய்களுக்குக் கறுப்புக் கொடிகளைக் கட்டி பெரியாண்டிச்சி அம்மனிடம் மனு கொடுத்து பொங்கல் வைத்து கண்ணீரோடு வழிப்பட்டார்கள். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன், பழனியம்மாள், பார்வதி ஆகியோருக்கு சாமி வந்து ``டேய்... நீங்க யாரும் பயந்துக்க வேண்டாம். உங்க நெலத்தை எடுக்க முடியாது. நான் நெலத்தை எடுக்க விட மாட்டேன்'' என்று கூறிய சம்பவங்களும் நடந்தேறின. இதற்கிடையில் கடந்த 29ம் தேதியோடு இரண்டாம் கட்டப் பணிகளும் நிறைவு பெற்றது.

சேலம் விவசாயிகள்

மூன்றாம்கட்டப் பணி:

மூன்றாம் கட்டப் பணியாக நேரடியாக வருவாய் துறை அதிகாரிகள் 8 வழிச் சாலைக்கு முட்டுக்கல் போடப்பட்ட பகுதிகளுக்குச் சென்று டேப் பிடித்து அளவுகள் சரிபார்க்கும் பணியை 30ம் தேதியிலிருந்து தொடங்கினார்கள். அப்போது பாரப்பட்டி பூமாங்காடு பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து விளை நிலத்துக்குள் வரக் கூடாது என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் விவசாயிகளைத் துரத்திப் பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றி மல்லூர் காவல் நிலையத்தில் வைத்து நில அளவை முடித்த பிறகு மாலையில் விட்டார்கள்.

சேலம் விவசாயிகள்

அதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், மாணிக்கம் என்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவதாகக் கிணற்றில் குதித்தார்கள். உடனே பொதுமக்களும், போலீஸும் கிணற்றில் குதித்து அவர்களை மீட்டார்கள். 5ம் தேதியோடு மூன்றாம் கட்டப் பணியையும் நிறைவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து அனைவரும் சேர்ந்து 8 வழிச் சாலையைத் தடுத்து நிறுத்துவோம் என்று உறுதிகூறி சென்றிருக்கிறார்கள்.

சேலம் விவசாயிகள்


நான்காம்கட்டப் பணி:

இதற்கிடையே 6ம் தேதி நான்காம் கட்டப் பணியாக மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் சேலம் டி.ஆர்.ஓ., சுகுமார் தலைமையில் அயோத்தியாப்பட்டனம் கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து மண்டபத்துக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் செய்தார்கள்.

போராட்டங்கள் தொடர்ந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அரசு தான் நினைத்ததைச் செய்துகொண்டுதானிருக்கிறது. இந்தத் திட்டம் குறித்த முழுமையான டாகுமென்ட்ரியை இந்த வீடியோவில் காணலாம்.

 

 

 

.

 


டிரெண்டிங் @ விகடன்