`சென்னை மெட்ரோ பெயரில் போலி இணையதளம்'- சிக்கிக்கொண்ட கேரள வாலிபர் | Kerala Man Arrested For developed a fake website Like Chennai Metro Rail

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:14:20 (09/07/2018)

`சென்னை மெட்ரோ பெயரில் போலி இணையதளம்'- சிக்கிக்கொண்ட கேரள வாலிபர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தைப் போன்று போலி இணையதளம் உருவாக்கி அதில் வேலைவாய்ப்பு இருப்பதாக விளம்பரம் செய்த கேரள வாலிபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு தகவல் வெளியானது. இது சமூக வலைதளங்கள் போன்ற அனைத்திலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. பின்னர் இந்த வேலைக்கு சுமார் 4,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். `மெட்ரோவில் எந்த வேலைவாய்ப்பும் இல்லை,  இப்படி ஒரு பதிவை நாங்கள் வெளியிடவில்லை' என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மெட்ரோ நிர்வாக பொது மேலாளர், சென்னை கமிஷனரிடம் புகார் தெரிவித்திருந்தார். அதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் www.chennaimetrorail.org என்ற இணையத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், யாரோ ஒருவர் www.cmrlco.org  என்ற மெட்ரோவின் போலியான இணையதள பக்கத்தை உருவாக்கி அதில் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரப்படுத்தியுள்ளார். இதனால் எங்களுக்குத் தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. இது முறைகேடான செயல், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

பின்னர் இந்த வழக்கை போலீஸார் விரைந்து விசாரணை நடத்த சென்னை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். சில மாதங்களாக நடந்து வந்த இந்த விசாரணையில் கேரள மாநிலம் திரூரைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபர் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. பின்னர் கேரளாவில் தனிப்படை போலீஸார் அவரைக் கைது செய்து நேற்று சென்னைக்குக் கொண்டு வந்தனர். இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஸ்ரீஜித் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.


[X] Close

[X] Close