வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (09/07/2018)

கடைசி தொடர்பு:17:47 (09/07/2018)

சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரி பணி நியமனம்... அம்பலமான முறைகேடு!

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் (Legal Cum Probation Officer) அந்த மாவட்ட ஆட்சியரின்கீழ் இயங்கி வருகிறார்கள். இந்தப் பணிக்கு, வழக்கறிஞராக இருப்பவர் சம்பந்தப்பட்டத் துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரி பணி நியமனம்... அம்பலமான முறைகேடு!

டலூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரிப் பணிக்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில், இரண்டாம் மதிப்பெண் பெற்ற நபரை முதல் மதிப்பெண் பெற்றவராக மாற்றி, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது, ஆர்.டி.ஐ. தகவல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் (Legal Cum Probation Officer) அந்த மாவட்ட ஆட்சியரின்கீழ் இயங்கி வருகிறார்கள். இந்தப் பணிக்கு, வழக்கறிஞராக இருப்பவர் சம்பந்தப்பட்டத் துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் இந்தப் பணிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. இந்தத் தேர்வில், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் கலந்துகொண்டார். நேர்முகத் தேர்வில் இவருக்குத்தான் முதல் மார்க் கிடைத்ததாக அதிகாரிகள் பாலமுருகனிடம் சொல்லியுள்ளனர். நாள்கள் பல காத்திருந்த நிலையிலும் அவருக்குப் பணி நியமனத்துக்கான ஆணை வழங்கப்படவில்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாலமுருகன் போன் செய்து கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ``அந்தப் பணி வேறொருவருக்குக் கிடைத்துவிட்டது'' என்று பதில் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விவரங்களைப் பெற்ற பாலமுருகனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களில் 55 மதிப்பெண் பெற்று பாலமுருகன்தான் முதலிடத்தில் இருந்துள்ளார். ஆனால், இவரைவிடக் குறைவாக... அதாவது, 54 மதிப்பெண் பெற்ற செந்தில் என்பவர் அந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 54 ஆக இருந்த செந்திலின் மதிப்பெண்ணை, 56 ஆக அதிகாரிகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ-யில் தெரியவந்துள்ளது. 

ஆர்.டி.ஐ - அம்பலமான முறைகேடு

இதுகுறித்து பாலமுருகனிடம் கேட்டபோது, ``நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட பின்பு அங்கிருந்த சில அதிகாரிகள்,  `நீதான் முதலிடம் பெற்றுள்ளாய்' என்று வாழ்த்துகள் கூறினர். அதன்பிறகு அனைவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டோம். நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பல தினங்கள் ஆகியும் எனக்குப் பணி நியமன ஆணையோ அல்லது வேறு எந்த அறிவிப்போ வரவில்லை. இதனால் பாலமுருகன்அங்குள்ள அதிகாரியிடம் போன் செய்து கேட்டபோது, `அந்த இடத்துக்கு செந்தில் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்' எனப் பதில் வந்தது. இதையடுத்து, ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெற்றேன். அதில் எனக்கு 55 மதிப்பெண்ணும், செந்திலுக்கு 54 மதிப்பெண்ணும் போடப்பட்டிருந்தன. பின்னர், செந்தில் எடுத்த 54 மதிப்பெண்ணை 56 ஆகத் திருத்தி மாற்றியுள்ளனர். இதனால் அதிர்ச்சியுற்ற நான், `எதற்காக இப்படிச் செய்தீர்கள்' என நேர்காணல் நடத்திய அதிகாரிக்கு போன் செய்து கேட்டபோது, சம்பந்தமே இல்லாத பதிலைச் சொல்லி போனை கட் செய்துவிட்டார். எனக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அதிகாரிகளின் இந்தத் தில்லுமுல்லு வேலையை மக்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும்" என்றார் சற்றே கொதிப்புடன்.

இதுபற்றி நேர்காணல் செய்த அதிகாரி ஒருவருக்கு போன் செய்து கேட்டபோது, ``இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு மிகச் சரியாக நடந்தது. யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை. மூன்று பேர் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள். மூன்று பேரின் மதிப்பெண்ணையும் பொறுத்துதான் அதற்கான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், ஆர்.டி.ஐ. தகவலில் செந்திலின் மதிப்பெண் திருத்தப்பட்டுள்ளது. அவரின் மதிப்பெண் மாறியது எப்படி என்ற விவரமெல்லாம் எனக்குத் தெரியாது" என்றார்.

`தகுதி' பெற்றவர்கள் எல்லாம் `தகுதி நீக்கம்' செய்யப்படுவதுதானே தமிழகத்தின் தலையெழுத்தாய் இருக்கிறது.