``எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயார்!’’ - ஐந்துநாள் ரெய்டில் அசராத எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive | Edappadi palanisamy's reaction on namakkal I.T raid

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (09/07/2018)

கடைசி தொடர்பு:15:39 (09/07/2018)

``எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயார்!’’ - ஐந்துநாள் ரெய்டில் அசராத எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

`பா.ஜ.க கூட்டணியை நாம் உறுதி செய்ய வேண்டும்' என எடப்பாடி பழனிசாமியிடம் கூறியிருக்கிறார் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை. இதே கருத்தை ஓ.பன்னீர்செல்வம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

``எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயார்!’’ - ஐந்துநாள் ரெய்டில் அசராத எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

நாமக்கல் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. `பா.ஜ.க கூட்டணியை நாம் உறுதி செய்தாக வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக ரெய்டு நீண்டுகொண்டேபோகிறது' என்கின்றனர் ஆளும்கட்சி வட்டாரத்தில்.

திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் குமாரசாமி என்பவருக்குச் சொந்தமான கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசின் சத்துணவுத் திட்டங்களுக்கான பொருள்களை இந்த நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. இத்தனை ஆண்டுகளில் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சாதகமாக டெண்டர் விதிகள் வளைக்கப்பட்டபோதிலும், எந்தவித சிக்கலையும் சந்திக்காமல் வளர்ந்துகொண்டிருந்தது. கடந்த ஐந்து நாள்களாக இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைத் துருவிக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. கிறிஸ்டி நிறுவனத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள நட்பு குறித்துதான், ஐ.டி அதிகாரிகள் கணக்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். "இந்நிறுவனத்தின் உரிமையாளரான குமாரசாமியைச் சென்னையிலிருந்து திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறோம். போலியான ஆவணங்களை வைத்து வங்கிகளில் கடன் பெற்றது; போலி நிறுவனங்களில் யாருடைய முதலீடு இருக்கிறது; ஆளும்கட்சியின் நட்பு உட்பட பல விவகாரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் போலி நிறுவனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆவணத்தின் அடிப்படையில் மேலும் சிலர் வளைக்கப்பட உள்ளனர். அடுத்ததாக, இந்நிறுவனத்தின் வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அனைத்துத் தகவல்களும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது" என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

அதேநேரம், குமாரசாமியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி அமைச்சர்கள். இந்த ரெய்டு குறித்துப் பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், `நாமக்கல்லில் சத்துணவுத் திட்ட முட்டை முறைகேட்டில் 2 அமைச்சர்களுக்கு அல்ல, பல அமைச்சர்களுக்குத் தொடர்பிருக்கிறது' என்றார். இதற்குப் பதில் அளித்த ஜெயக்குமார், `ரெய்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறார் தினகரன். பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்துத் தலைமைதான் முடிவு செய்யும்' என்றார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் நழுவினாலும் பா.ஜ.க கூட்டணியை முன்வைத்து நடக்கும் அரசியல் ஆட்டத்தை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். 

கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம்

``ரெய்டைத் தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்தில் ஆளும்கட்சி புள்ளிகளின் தொடர்பு குறித்து விவரங்கள் வெளியாகலாம். அப்படி நடந்தால், அது எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும். பா.ஜ.க கூட்டணி தொடர்பாக நேரடியாகக் கருத்து தெரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி மௌனம் காக்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அண்ணா தி.மு.கவின் அதிகாரத்தைக் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் பன்னீர்செல்வம், ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். முதல்வரின் மௌனம் அவருக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தந்திருக்கிறது" என விவரித்த அண்ணா தி.மு.கவின் சீனியர் நிர்வாகி ஒருவர், 

" பா.ஜ.க கூட்டணி தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. ' பா.ஜ.க கூட்டணியை நாம் உறுதி செய்ய வேண்டும்' என முதலமைச்சரிடம் கூறியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. இதே கருத்தை ஓ.பன்னீர்செல்வம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கருத்தில் வேறு சில அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை. அவர்கள் எடப்பாடியிடம் பேசும்போது, ' பா.ஜ.கவுடன் நாம் கூட்டணி சேர்ந்தால் கிறிஸ்துவ, முஸ்லிம் சமூகத்து மக்கள் நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதில் மிகுந்த அக்கறை செலுத்தினார் அம்மா. இவர்களுக்காகத்தான், விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்னையில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார். துப்பாக்கி பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கும் சிக்கல் ஏற்பட்டது. அண்ணா சாலையையே முடக்கும் அளவுக்கு இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினாலும், அம்மா மௌனம் காத்தார். காரணம், அவர்களின் வாக்குகள் நமக்கு முக்கியமானது என்பதுதான். அம்மா வழியில்தான் நாமும் பயணிக்க வேண்டும். சிறுபான்மையினர் வாக்குகளை நாம் இழந்துவிடக் கூடாது. பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் இந்த வாக்குகள் நமக்கு நிச்சயம் வந்து சேராது' என விவரித்துள்ளனர். 

கூட்டணி விவகாரத்தில் அமைச்சர்களுக்குள் இருவேறு கருத்துகள் பேசப்படுவதைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி, `அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளும் எனக்குத் தெரியும். அதை அறிந்து வைத்திருப்பதால்தான் அரசியல் நடத்திக்கொண்டிருக்க முடிகிறது. பா.ஜ.க கூட்டணியைப் பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. தேர்தல் அறிவிக்கும்போது இதைப் பற்றிப் பேசலாம். அதுவரையில் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயார்' எனக் கூறிவிட்டார். இந்தப் பதிலை பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் எதிர்பார்க்கவில்லை. 'எந்தப் பிரச்னையையும்' என முதல்வர் அழுத்திக் கூறுவது, நாமக்கல் ரெய்டு விவகாரத்தை முன்வைத்துதான். 'ஐ.டி ரெய்டை வைத்து, அவசரப்பட்டு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்துவிடாது' எனவும் உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக.