`நீ ஏன் என்னை வெறுக்கிறாய் சுமதி?' - சென்னைக் கல்லூரியில் நடந்த காதல் போராட்டம் | Because of one side love, man tried to kill a girl in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (09/07/2018)

கடைசி தொடர்பு:12:55 (10/07/2018)

`நீ ஏன் என்னை வெறுக்கிறாய் சுமதி?' - சென்னைக் கல்லூரியில் நடந்த காதல் போராட்டம்

சுமதியைக் கத்தியால் குத்த முயன்ற ஜிம் மாஸ்டர்

சென்னை கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம், `நீ ஏன் வெறுக்கிறாய்' என்று ஜிம் மாஸ்டர் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது மாணவியைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கடற்கரைப் பகுதியில் உள்ள கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தியுடன் அயனாவரத்தைச் சேர்ந்த மதன் என்பவர் நுழைந்தார். அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம் (பெயர் மாற்றம்) `நீ ஏன் என்னை வெறுக்கிறாய்?' என்று மதன் கேட்டுள்ளார். அதற்கு 'உன்னை எனக்குப் பிடிக்கவில்லை' என்று சுமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதன், சுமதியை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது சக மாணவர்கள் சுமதியை மதனிடமிருந்து காப்பாற்றினர். பிறகு, மதனை அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், மதனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்துவிட்டனர். இந்தத் தகவல் உயரதிகாரி ஒருவருக்குத் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு டோஸ் விழுந்துள்ளது. அதன்பிறகுதான் மதன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  ``சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் சுமதிக்கும், மதனுக்கும் பழக்கம் இருந்துள்ளது. மதன், அயனாவரத்தில் ஆண்கள் உடற்பயிற்சிக் கூடம் நடத்திவருகிறார். ஜிம் மாஸ்டராகவும் உள்ளார். சமீபகாலமாக மதனிடம் சுமதி பேசுவதில்லை. சம்பவத்தன்று சுமதி படிக்கும் கல்லூரிக்கு கத்தியுடன் மதன் சென்றுள்ளார். அப்போது, சுமதியும் அங்கு அவருடன் பயிலும் மாணவ, மாணவிகள் இருந்துள்ளனர். சுமதியிடம் தகராறு செய்த மதன், ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அதை சக மாணவர்கள் தடுத்துவிட்டனர். இல்லையென்றால் சென்னையில் ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினிக்கு ஏற்பட்ட நிலைமை சுமதிக்கும் நேர்ந்திருக்கும். 

இந்தச் சம்பவத்தில் முதலில் எந்தவிதப் புகாரும் வரவில்லை. இதனால், மதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள உயரதிகாரி ஒருவருக்கு இந்தத் தகவல் தெரிந்ததும் அவர் சம்பந்தப்பட்ட திருவல்லிக்கேணி சரக காவல் உயரதிகாரிகளையும் அண்ணா சதுக்கம் போலீஸரையும் கண்டித்தார். அதன்பிறகுதான் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

திருவல்லிக்கேணிக்குப் புதிதாக வந்திருக்கும் அந்த அதிகாரி மீது தூத்துக்குடியில் ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. பதவி உயர்வு பெற்று வந்துள்ள அந்த அதிகாரி, காவல்துறையில் யாரையும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ச்சைக்குப் பெயர் பெற்ற அந்த அதிகாரி, ஜிம் மாஸ்டர் மதன் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால்தான் போலீஸ் உயரதிகாரி கண்டித்தப்பிறகுதான் மதன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.  

மதன் விவகாரத்தை மூடி மறைக்கவே முதலில் போலீஸார் முயன்றுள்ளனர். ஆனால், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிக்குத் தகவல் கிடைத்தபிறகே கல்லூரியில் நடந்த காதல் போராட்டம் குறித்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.