`சர்கார்' படம் விவகாரம் - நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! 

`சர்கார்' திரைப்படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

விஜய்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதில், விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சுகாதாரத்துறை படக் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், `சர்கார்' திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அவரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `சர்கார் திரைப்படத்தின் மூலமாக புகைபிடிப்பதை நடிகர் விஜய் ஊக்குவிக்கிறார். அதனால், அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் ரூ.10 கோடியை அபராதத் தொகையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வுமுன் வந்தது. அதில், `நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!