`மணல் கடத்தினால் பெர்மிட்டை ரத்துசெய்யலாம்!’ - லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தகவல் | Illegal Sand transporting trucks will lose permit, says Tamilnadu Lorry Owners Federation

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:16:00 (09/07/2018)

 `மணல் கடத்தினால் பெர்மிட்டை ரத்துசெய்யலாம்!’ - லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தகவல்

  மணல்

'தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளின் பெர்மிட்டை ரத்துசெய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட லாரிகளின் உரிமையாளர்கள், டிரைவர்கள்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்' என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும்  எட்டு மணல் குவாரிகள் செயல்பட்டன. அதில், கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட இரண்டு குவாரிகள் செயல்படவில்லை. இதனால், தேவைக்கு ஏற்ப மணல் கிடைப்பதில்லை. இந்த நிலையில், குவாரிகளிலிருந்து மணல் எடுத்துச் செல்லப்பட்டு அரசு மணல் விற்பனை நிலையத்தில் விற்கப்படுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ராசாமணி, தலைமைச் செயலாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். 

அவரிடம் பேசினோம். ``கடந்த நான்கு மாதங்களாக, அரசு மணல் குவாரிகளில் லாரிகளுக்கு நேரடியாக மணல் லோடு செய்யாமல், அரசு குவாரிகளுக்கு வெளியில் உள்ள அரசு மணல் விற்பனை நிலையம்மூலம் விற்கப்படுகிறது. அரசு மணல் குவாரிகளில் அரசாணைப்படி 2 யூனிட் மணல் ரூ.1,080-க்கும் 3 யூனிட் மணல் ரூ.1,620-ம் விற்கப்படுகிறது. அரசு விற்பனை நிலையத்தில் 2 யூனிட் மணல் ரூ.2,660-க்கும் 3 யூனிட் மணல் 3,990-க்கும் விற்கப்படுகிறது. கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். 

 குவாரிகளிலிருந்து அரசு மணல் விற்பனை நிலையத்துக்கு மணலை எடுத்துச் செல்வதற்குத் தனியாருக்கு லோடிங் மற்றும் போக்குவரத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. இது, ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், அரசு மணல் குவாரிகளிலிருந்து அரசு அனுமதித்துள்ள யூனிட்களுக்கு மேல் மணல் ஏற்றப்படுகிறது. போலியான பெர்மிட் மூலம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதன்மூலம் அரசுக்கு தினமும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போலி அனுமதிச்சீட்டு மூலம் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் மணல் விற்கப்படுகிறது. 

குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சி மற்றும் சத்திரகண்டிகை ஆகிய இடங்களில் ஆற்றுப்படுகையோரம் உள்ள பட்டா நிலங்களிலிருந்து அனுமதியின்றி தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இதற்கு, கனிமவளத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பைக்கில் மணல் கடத்தப்படுகிறது. அரசின் ஆறு குவாரிகள்மூலம் தினமும் 1800 லோடுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், சட்டவிரோதமாக 5000 லோடுகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அரசின் ஆன் லைன் முன்பதிவுமூலம் ஒரு லோடுக்கு, ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்கவேண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 32 தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே செயற்கை மணல் தயாரித்து விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உரிமம் பெறாமல் சில நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டுவரும் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மீதும் குண்டர்சட்டத்தில் வழக்குப்பதிவுசெய்து, லாரிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டியும் உறுதுணையாக இருந்து செயல்படும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மணல் கடத்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.