வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (09/07/2018)

கடைசி தொடர்பு:16:32 (09/07/2018)

``தனியரசு எம்.எல்.ஏ முகத்தில் கரி பூசியது யார்?" - கரூர் போஸ்டர் பஞ்சாயத்து

``தனியரசு எம்.எல்.ஏ முகத்தில் கரியைப் பூசியது யார்?' - இந்தக் கேள்விதான் தற்போது கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரபரப்பை உண்டாக்கிவருகிறது.

``தனியரசு எம்.எல்.ஏ முகத்தில் கரி பூசியது யார்?

காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் தனியரசு, கொங்கு மண்டலத்தில் பிரபலமானவர். அவரது அமைப்பு பெயர் மற்றும் அவரது படம் இடம்பெற்ற போர்டுகள், கரூர் மாவட்டத்தில் உள்ள அநேக ஊர் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ளன. அதில், 15-க்கும் மேற்பட்ட ஊர்களில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் உள்ள தனியரசு புகைப்படங்களில், அவரது முகத்தில் யாரோ கரியைப் பூசிவிட... அதுதான், தற்போது எல்லோராலும் பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கிறது.

இதுகுறித்து கரூரைச் சேர்ந்த கார்வேந்தன், ``தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவராகத் தன்னை தனியரசு வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால், அந்தப் பேரவை இப்போது எங்களிடம்தாம் இருக்கிறது. அந்தக் கட்சியை 2016- ல் முறையாகப் பதிவு செய்தது நாங்கள்தாம். தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, எல்லா மாவட்ட கலெக்டர், எஸ்.பி-களுக்கும் தேர்தல் ஆணையம், `தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு பயன்படுத்தக் கூடாது' என்று உத்தரவிட்டுள்ளது. போலீஸும் அதை மதிக்கவில்லை; தனியரசும் அதை மதிக்கவில்லை'' என்றார். 

தனியரசு

இந்த விவகாரம் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான், கரூர் ஒன்றியத்தில் உள்ள கெ.வெங்கடபுரம், மீனாட்சிபுரம், செய்யப்பக்கவுண்டன் புதூர், மட்டிப்பள்ளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் தனியரசு முகங்களில் யாரோ கரியைப் பூசி இருக்கும் விவகாரம் பூதாகரமாகிக்கொண்டிருக்கிறது.  

இதைப்பற்றி எம்.எல்.ஏ. தனியரசுவிடம் பேசினோம். ``கட்சி இப்போது யாரிடம் இருக்கிறது என்று கொங்கு மண்டலத்து மக்களுக்குத் தெரியும்; எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியும். அதை விட்டுவிட்டு, சிலர் தங்கள் பக்கம் கட்சி இருப்பதாகச் சொல்வதை எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல், எங்கள் அமைப்பு சார்பாக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில், என் முகத்தில் விஷமிகள் கரியைப் பூசி இருப்பதாக நானும் கேள்விப்பட்டேன். எங்கள் அமைப்பின் கரூர் மாவட்டச் செயலாளர் அருளை விட்டு, அதை செக் செய்யச் சொல்லி இருக்கிறேன். அப்படி என் முகத்தில் கரி பூசியிருப்பது உண்மை என்றால், அந்தக் காரியத்தைச் செய்தவர்கள்மீது சட்டரீதியாகத் தக்க நடவடிக்கை எடுப்பேன்" என்றார் மிகத் தெளிவாக.

தனியரசுஇதுகுறித்து தனியரசு ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ``கட்சி எங்கள் அண்ணன் (தனியரசு) கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், 2013 வரை எங்கள் கட்சியில் தலைமை நிலையச் செயலாளராகவும், கரூர் மாவட்டத் தலைவராகவும் இருந்தவர் கார்வேந்தன். எங்கள் அண்ணனால் வளர்ந்த அவர், அதன்பிறகு எங்கள் அண்ணனைக் குப்புறத் தள்ளிவிட்டு, தான் முன்னேற நினைத்தார். அதனால், `எல்லாரும் என்கூட வந்துட்டாங்க' என்று அவரே புரளியைக் கிளப்பிவிடுகிறார். அதோடு, ஏதோ கட்சியை எங்கள் அண்ணனிடமிருந்து தான் கைப்பற்றிவிட்டதாகத் தேர்தல் ஆணையத்துக்கு மொட்டைக் கடிதம் போட்டுக்கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டத்தில் வைத்திருக்கும் எங்கள் அமைப்பின் போர்டுகளில் உள்ள அண்ணன் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறது கார்வேந்தன் தரப்பு. இதை நாங்கள் சும்மாவிடப் போவதில்லை" என்றார்கள் ஆக்ரோஷமாக!

கார்வேந்தனிடம் மீண்டும் பேசினோம், ``தன்னை மட்டும் வளர்த்துக்கொள்வதற்காகத் தனியரசு என்ன வேண்டும் என்றாலும் செய்வார். அதில் ஒன்றுதான், தனது முகத்தில் தானே கரியைப் பூசிக்கொண்டு, பழியை எங்கள்மீது போடும் இந்தச் செயல். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பு எங்களிடம்தான் இருக்கிறது. நாங்கள்தான் அதை முறையாகப் பதிவு செய்திருக்கிறோம். அது சம்பந்தமான அத்தனை ஆவணங்களும் எங்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், தனியரசு யார் என்று எல்லோருக்கும் தெரியும். 2000-த்துக்கு முன்புவரை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பு, குமார.ரவிக்குமார் என்பவரிடம்தான் இருந்தது. 

நானும், தனியரசுவும் அப்போது தொண்டர்களாக இருந்தோம். அதன்பிறகு, தனியரசு கட்சியில் சுறுசுறுப்பாக இருந்ததால், அவர் பின்னேகார்வேந்தன் நாங்கள் சென்று கட்சியைக் கைப்பற்றினோம். இதனால் குமார.ரவிக்குமார், `கொங்கு இளைஞர் பேரவை தமிழ்நாடு' என்று தனது அமைப்பின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டார். 2011 வரை தனியரசு, எங்கள் மக்களுக்குக் காவலனாகத்தான் இருந்தார். நிர்வாகிகளையும் மதித்தார். ஆனால், அமைப்பைப் பதிவு செய்யவில்லை. இதைப்பற்றி காரணம் கேட்டதற்கு, `அமைப்பைப் பதிவுசெய்தால், ஆளாளுக்குக் கேள்வி கேட்பார்கள். பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். அதில், யாராவது பேசி அமைப்பை உடைப்பான். அதனால், தனியரசுதான் கட்சி. ஆகையால், பதிவு செய்யாமல் நம் கட்சியை வித்தியாசமாக நடத்துவோம்' என்று சொன்னார். 2011-இல் அ.தி.மு.க கூட்டணியில், அவருக்கு சீட் வாங்க அப்போது அமைப்பின் தலைமை நிலையச் செயலாளராகவும், மாவட்டத் தலைவராகவும் இருந்த நான்தான் போய் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், காங்கேயம் தொகுதியில் அவர் எம்.எல்.ஏ ஆனதுக்குப் பிறகு ஆளே மாறிவிட்டார். 

சம்பாதிக்கிறது ஒன்றையே குறியாக வைத்துக்கொண்டார். நிர்வாகிகளை, தவறாகப் பேச ஆரம்பித்தார். கட்சிக்காரர்களின் வீட்டு விசேஷத்துக்கு வருவதற்குக்கூட 25 ஆயிரம் பணம் கேட்பார். கொங்கு ஈஸ்வரன் கொலை வழக்கில் உள்ளேபோன `தீரன் சின்னமலை பேரவைத் தலைவர்' யுவராஜ் என்று எல்லாரிடமும் ஆள்களை வைத்து பிரச்னை செய்யவைத்தார். அந்தப் பழியை எங்கள் அமைப்பின் அந்தந்த மாவட்ட தலைவர்கள் மீது போட வைப்பார். தன்னைவிட யாரும் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் செய்தார். இப்படி எங்கள் மக்களுக்குப் பாதுகாவலனாக இல்லாமல், ஆங்காங்கே கொங்கு மண்டலத்தில் கலவரங்கள் ஏற்பட காரணமாக இருந்தார். அதனால், 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் ஒன்றுகூடி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைவிட்டு தனியரசுவை நீக்கினோம். 2016- ம் ஆண்டு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை முறையாகப் பதிவுசெய்தோம். அந்த அமைப்பின் மாநிலத் தலைவராக நான் இருக்கிறேன். ஆனால், அந்த அமைப்பின் பெயரை தனியரசு தொடர்ந்து பயன்படுத்தினார். இதனால், நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தோம். உடனே அவர்கள், தமிழக டி.ஜி.பி-க்கு, `தனியரசு அந்த அமைப்பு பெயரை பயன்படுத்தக் கூடாது. அவசர நடவடிக்கை தேவை' என்று உத்தரவிட்டனர். டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து எல்லா மாவட்ட நிர்வாகங்கள், எஸ்.பி-களுக்கு இந்த உத்தரவு நகல் அனுப்பப்பட்டது. சில மாவட்ட போலீஸ், அதை நடைமுறைப்படுத்திவிட்டனர். காங்கேயத்தில் உள்ள காவல் நிலையத்தில்கூட, `இனி அந்தப் பெயரைப் பயன்படுத்தமாட்டோம்' என்று அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் எழுதி வாங்கிக்கொண்டனர். 

தனியரசு

ஆனால் குறிப்பாக, கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜா, `தனியரசு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பெயரைப் பயன்படுத்துவதா, வேண்டாமா என்று நீங்கள் சொல்லக் கூடாது. கோர்ட் சொல்லட்டும்... கோர்ட்டுக்குச் செல்லுங்கள்' என்று தனியரசுக்குச் சார்பாகப் பேசுகிறார். அதனால், நாங்கள் கோர்ட்டுக்குப் போயிருக்கிறோம். இந்த நிலையில், பயத்தில் அரசியல் ஸ்டண்டு அடிக்க... போர்டுகளில் உள்ள தனது போட்டோ முகத்தில் தனது ஆள்களைவிட்டே கரியைப் பூசச் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால், வேறு கொங்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்படிச் செய்திருக்க வேண்டும். கரூரில் எங்கேயும் அவருக்கு ஆதரவு இல்லை. ஊருக்கு ஒருத்தர் இருந்தாலே ஆச்சர்யம். அதுவும் சின்னபசங்களை வைத்துக்கொண்டு, அவர்களிடம் சாதி உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து அப்பாவி கொங்கு இளைஞர்களை மீட்பதே எங்கள் லட்சியம்; அவர் முகத்தில் கரியைப் பூசுவதல்ல" என்றார், சற்றே நிதானத்துடன்.

இதைப்பற்றி, மறுபடியும் தனியரசுவிடம் பேச முயன்றோம். நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவிடமும் பேச முயன்றோம். முடியவில்லை.


டிரெண்டிங் @ விகடன்