வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (09/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (09/07/2018)

`தமிழ்நாட்டில் மட்டும் புதிய நடைமுறை!' - லோக் ஆயுக்தாவைச் சாடும் சமூக ஆர்வலர்கள்

சட்டப்பேரவையின் இறுதிநாளான இன்று, அவசர அவசரமாக லோக் ஆயுக்தா சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படாமல் நிறைவேற்றப்பட்டது, பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லோக் ஆயுக்தா

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி லோக் ஆயுக்தா மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். அதில், 'லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினரை ஆளுநர் தேர்ந்தெடுப்பார். ஆளுநருக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்ய நியமனக் குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்டோர் இருப்பார்கள்' என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'முதல்வரின் பெயரை சட்ட முன்வடிவில் குறிப்பிடாமல், அமைச்சர் என்ற வார்த்தை முதலமைச்சருக்கும் பொருந்தும்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ரங்கபிரசாத்திடம் பேசினோம். "லோக் ஆயுக்தா சட்ட மசோதாவின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுப் புகார் கூறப்படும்போது, ஒருவேளை அந்த மக்கள் பிரதிநிதி, நிரபராதி எனத் தெரியவந்தால், புகார் தெரிவித்தவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, யாரும் அதிகாரிகள் மீதோ, அமைச்சர் மீதோ, முதலமைச்சர் மீதோ புகார் அளிக்க முன்வர மாட்டார்கள். மற்ற எந்த மாநிலங்களிலும் இந்த நடைமுறை இல்லை.1970-ம் ஆண்டுகளில் கருணாநிதி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது, இதேபோல ஒரு சட்டத்தை கருணாநிதி கொண்டுவந்தார். அது,`கறுப்புச்சட்டம்; மக்களுக்கு எதிரானது' எனக் கூறி ,அந்தச் சட்டத்தை ரத்துசெய்தார் எம்.ஜி.ஆர். அவர் வழியில் வந்த அ.தி.மு.க-வினர், மீண்டும் அதே போன்றதொரு முறையைக் கொண்டுவந்துள்ளனர்.

அதேபோல, நியமன குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதி இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்குப் பதிலாக சபாநாயகரை நியமித்துள்ளனர். மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், அவசர அவசரமாக யார் கருத்தையும் கேட்காமல், விவாதம் நடத்தாமல், வெறும் ஓட்டெடுப்பு முறையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றம் என்பது விவாதம் நடத்தி உறுப்பினர்களின் கருத்துகளை உள்வாங்கி மாற்றம் செய்வதுதான். ஆனால், எதுவும் பின்பற்றப்படவில்லை. நிலைக்குழுக்கள் அமைத்து நாடாளுமன்றம் போல இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.