கிறிஸ்டி நிறுவனத்திடம் கமிஷன் பெற்றார்களா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்? | Is Christy friedgram industry gives bribery to IAS officers?

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:10:29 (12/07/2018)

கிறிஸ்டி நிறுவனத்திடம் கமிஷன் பெற்றார்களா ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்?

கிறிஸ்டி நிறுவனம்

தமிழக அரசு சத்துணவுத் திட்டத்துக்கு சத்துமாவு, முட்டை, பருப்பு வழங்கி வந்த கிறிஸ்டி மற்றும் அதன் பினாமி நிறுவனங்களில் தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி; ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். குமாரசாமி ஒரு  ஐ.ஏ.எஸ்  பட்டியலைக் கொடுத்து இவர்களுக்கெல்லாம் பல கோடி கமிஷன் கொடுத்திருப்பதாகக் கூறி இருப்பது தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இதுபற்றி வருமானவரித்துறை அதிகாரியிடம் விசாரித்தபோது, ``தமிழக அரசின் சத்துணவு மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சத்துமாவு, முட்டை, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருள்களைக் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனம் மற்றும் அதன் பினாமி நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், சொர்ணபூமி என்டர்பிரைசஸ் போன்றவை வழங்கி வருகின்றன.

இதன் உரிமையாளரான குமாரசாமி 75-க்கும் மேற்பட்ட பினாமி மற்றும் போலி நிறுவனங்கள் பெயரில் இந்தியா முழுவதும் ஒப்பந்தங்கள் எடுத்து அரசுக்கு 1,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதையடுத்து இன்று 5 வது நாளாகச் சோதனை செய்து வருகிறோம். அவரை எந்த வித மன உளைச்சலுக்கும் ஆளாக்காமல் யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தீர்கள் என்று மட்டும் கேட்டு வருகிறோம். நேற்றைய விசாரணையின்போது குமாரசாமி நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் உயர் பொறுப்பில் இருந்த முன்னாள், இன்னாள் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலைக் கொடுத்து இவர்களுக்கு பல கோடி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்து உள்ளார்'' என்றனர்.