வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (09/07/2018)

ஆன்லைனில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு! - தனியாரிடம் ஒப்படைப்பது யாருக்கு லாபம்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'ஆன்லைனில் தேர்வுகளை நடத்தும் பணியைத் தனியாரிடம் ஒப்படைத்தால், ஊழல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம்' என்கின்றன அரசியல் கட்சிகள். 

டி.என்.பி.எஸ்.சி

ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவருகின்றனர். அதிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை நம்பி பல்லாயிரம் மாணவர்கள் இரவு பகலாகப் படித்துவருகின்றனர். இந்நிலையில், ஆன்லைனிலேயே போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கு முடிவுசெய்திருக்கிறது டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம். இந்த அறிவிப்புக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, ' அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக, விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. நன்மைகளைவிட அதிகத் தீமைகளை ஏற்படுத்தக்கூடிய அரசின் இம்முடிவை ஏற்க முடியாது; இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடத் தாமதம் ஆவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆணையம் வெளியிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் இந்த நோக்கம் நல்லதுதான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையிலான தாள்களின் முடிவுகளை  அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதில்லை. அத்துடன், அத்தகைய தாள்கள் கணினிமூலம்தான்  திருத்தப்படும் என்பதால், அதில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எழுத்துமூலம் விடையளிக்கும் முதன்மைத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில்தான் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்பது விடைத்தாள்களைத் திருத்தும் பணியை விரைவுபடுத்துவதுதானே தவிர, ஆன்லைன் தேர்வு அல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். தேர்வு அறையின் மேற்பார்வையாளர்கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவே இருப்பார்.  அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து ஒரு தேர்வு மையத்துக்கு ஒரே ஒரு பார்வையாளர் மட்டுமே அனுப்பிவைக்கப்படுவார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நடைபெறும் தேர்வுகளில், எந்த முறைகேடும் நடக்காது என்று நம்புவது மூட நம்பிக்கையாகவே அமையும். போட்டித்தேர்வுக்கான வினாத்தாள்களைக் கணினிகளில் பதிவேற்றம் செய்வதற்காக அவை ஓரிரு நாள்களுக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும்போது, வினாத்தாள்கள் கசிய வாய்ப்புள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஆன்லைன் தேர்வு முறைகுறித்து, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் பிரபாகரனிடம் பேசினோம். “இதே முறையை 12 வருடங்களுக்கு முன்னர் யு.பி.எஸ்.சி-க்கு நாங்கள் பரிந்துரைத்தோம். ஆனால், அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்த ஆன்லைன் தேர்வு முறையில் பல நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நன்மைகள் எனப் பார்த்தால், கேள்வித்தாள்கள் வெளியில் கசிய வாய்ப்பில்லை. தேர்வு முடிவுகள் மிகவும் வேகமாக வெளியிடப்படும். தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்கும். தேர்வு தொடர்பான மற்ற விஷயங்களை மாணவர்களால் எளிதில் அறிந்துகொள்ள முடியும். தீமைகள் என்னவென்றால், தனியார் கைகளுக்குத் தேர்வுப் பணிகள் செல்வதால், கேள்விதாள்கள் உள்ளிட்ட இதர தகவல்கள் வெளியே கசியாமல் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். தற்போது, டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளுக்கு மட்டுமே இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் நடந்ததுபோல, எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத் தடுப்பதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி எழுத்துத் தேர்வைவிட இணையத்தில் எழுதுவது மிகச் சிறந்த முறை” என்றார்.