தமிழகத்தில் `பேண்டிக்கூட் ரோபோ'வை அறிமுகப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கேரளாவைப்போல தமிழகத்திலும் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பேண்டிக்கூட் ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கட்சிக் கொடிகளைப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது எனப் போலீஸார் தடுத்ததால் போலீஸாருக்கும் பேரவையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 பேண்டிக்கூட் ரோபோ அறிமுகப்படுத்த ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முருகேசன், “மனிதக் கழிவை மனிதன் அகற்றும் பேரவலத்தைப் போக்கிட, கையால் மலம் அள்ளுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2018-ல் கொண்டு வரப்பட்டது. அதைப்போல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் பல வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் நாள் ஒன்றுக்கு ஏதோ ஓர் ஊரில் மலக்குழியைச் சுத்தம் செய்யும் தொழிலாளி நச்சுவாயு தாக்கி மரணமடையும் செய்தி வந்துகொண்டே இருக்கிறது. சட்டம் வலுவாக இருந்தும், உச்ச நீதிமன்ற வழிகாட்டல்கள், நெறிமுறைகள் சிறப்பாக இருந்தும் இப்படிப்பட்ட மரணங்கள் முடிவுக்கு வராமல் இருப்பது கவலையாகவே உள்ளது.

இந்தக் கவலைக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கேரள அரசு, மனிதக் கழிவை மனிதன் அகற்றும் அவலத்தைப் போக்கிடவும் மலக்குழி மரணங்களைத் தடுத்திடவும், “கழிவு அகற்றும் எந்திரம் பேண்டிக்ட் ரோபோவை” அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோவை தமிழகத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என கடந்த மார்ச் 1-ம் தேதி தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் பேரவை சார்பில் பதிவுத் தபால் அனுப்பியும், தற்போது வரை பதில் ஏதும் இல்லை. இதைத் தமிழகத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். 

 ஆதித்தமிழர் பேரவையினர் போலீஸூடன் வாக்குவாதம்

கழிவு அகற்றும் எந்திரம் பேண்டிக்கூட் ரோபோவை பற்றிய முழு விவரங்களை அறிந்து வர தமிழக அரசின் சார்பில் ஆய்வுக்குழு ஒன்றை கேரளாவுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மலக்குழியில் இறங்கி கழிவு அகற்றும் போது நச்சுவாயு தாக்கி மரணம் அடைந்தோருக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கி உள்ள வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டு வரும் ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி அரசே வழங்கிட வேண்டும்.

இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். மலக்குழியில் இந்த மரணங்களுக்கு காரணமான அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவன உரிமையாளர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும். எய்ட்ஸ், குழந்தைத் தொழில் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல், காசநோய், மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றுக்கு அரசே முன்னின்று விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொள்வதுபோல, மலக்குழியில் மனிதரை இறக்கி சுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் மீறுவோர் யாராக இருந்தாலும் குற்றவழக்கில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசே விழிப்பு உணர்வு செய்ய வேண்டும்.

மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2015-ஐ தமிழாக்கம் செய்து அந்தச் சட்டப்புத்தகத்தைக் காவல்துறை முதலிய துறைகளுக்கு வழங்கிட வேண்டும். மலக்குழி மரணங்கள் நடக்காமல் தடுக்க விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களைத் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும்” என்றார்.

 ஆதித்தமிழர் பேரவையினர் - போலீஸார் வாக்குவாதம்

தூத்துக்குடி துப்பக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து
40 நாள்களுக்கு மேலாகியும் இந்த நிபந்தனை தொடர்கிறது. கட்சிக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஆதித்தமிழர் பேரவையினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!