மீனவர்கள், படகுகளை மீட்டுத் தர கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளையும் சிறையில் உள்ள மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த ஆலோசனை கூட்டம்

பாரம்பர்யப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் அவர்களுக்குச் சொந்தமான படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 180-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அங்குள்ள கடற்கரைப் பகுதிகளில் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், கடந்த இரு நாள்களில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 3 படகுகளையும் 16 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றுள்ளது.

 மீனவர்களுக்கு எதிராக, இலங்கையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்தால், 2 கோடி ரூபாயிலிருந்து 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், தடைசெய்யப்பட்ட மீன் வலைகளைப் பயன்படுத்தினால், ரூபாய் 50,000 விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும்; இலங்கை அரசின் பிடியில் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கவில்லை எனில், ஒவ்வொரு படகுக்கும் மத்திய அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தைத் திரும்பப் பெற இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!