ஃபார்மலின் கலக்கப்பட்ட மீன்கள்! - மீன்வளத்துறை அதிகாரியின் அதிர்ச்சிப் பேட்டி

சென்னையில் விற்பனைசெய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், `பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை, அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது' என்கின்றனர் மீன்வளத்துறை அதிகாரிகள். 

மீன்கள்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மீன்களை வாங்கிச்செல்கின்றனர். முக்கிய மீன் விற்பனைச் சந்தைகளான இங்கு, விற்பனையாகும் மீன்களின் தரம்குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டன. சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட சந்தைகளிலிருந்து வாங்கப்பட்ட சுறா, கெளுத்தி, ஏரி வௌவால்,ஓட்டுக் கனவா ஆகியவற்றில் இருந்து 30 மீன்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 30 மீன்களில் 11 மீன்களுக்கு ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து மீன்கள் ஏற்றிவந்த லாரிகளைச் சோதனை செய்த கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மீன்களில் ஃபார்மலின் கலந்திருப்பதை உறுதிசெய்து பறிமுதல்செய்தனர். இந்நிலையில், சென்னையில் விற்பனையாகும் மீன்களிலும் ஃபார்மலின் கலந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த வகை மீன்களைச் சாப்பிடுவதன்மூலம் புற்றுநோய் உள்பட பலதரப்பட்ட நோய்கள் உருவாகும் என அதிர்ச்சி தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். 

தமிழக மீன்வளத்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " தமிழகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட மீன்களில் ஃபார்மலின் கலந்திருப்பதைக் கேரள உணவுத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர் என்ற தகவல் வெளியான பிறகு, தமிழகத்தில் உள்ள முக்கிய மீன் துறைமுகங்கள், மீன் பிடிப்புப் பகுதிகள், மீன் விற்பனை மையங்கள் மற்றும் மீன் சந்தைகளில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து சோதனை நடத்தினோம். சோதனைக்காக எடுக்கப்பட்ட மீன் மாதிரிகளை ஆய்வு செய்ததில், ஃபார்மலின் செலுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளை, அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளனர். ஆனால், தமிழக மீன்வளப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ஃபார்மலின் கலந்திருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வறிக்கையை, தமிழக உணவு பாதுகாப்புத் துறையிடம் சமர்ப்பிக்கக் கேட்டுள்ளோம். எந்தெந்த இடங்களில் ஃபார்மலின் செலுத்தப்பட்ட மீன்கள் விற்பனையாகின்றன, அவ்வகை மீன்களை விற்கும் நபர்களை உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முழுமையான தகவலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 

சாதாரணமாக, சந்தையில் விற்கப்படும் மீன்களில் ஃபார்மலின் இல்லை. ஆனால், தொலைதூரத்துக்கு ஏற்றுமதிசெய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் செலுத்தப்படுவதுக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், தமிழக அரசு மற்றும் உணவுத்துறை சார்பில் எச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள், மீன் விற்பனை செய்பவர்களுக்கும் விழிப்பு உணர்வு வழங்கப்பட்டுவருகிறது. முறையான பரிசோதனைக்குப் பிறகே, சந்தையில் மீன்வளத்துறை சார்பில் மீன்கள் விற்கப்பட்டுவருகின்றன. சந்தைகளில் விற்கப்படும் மீன்களில் ஃபார்மலின் உள்ளது என்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம். இதனால், மீனவர்களும் மீன் வியாபாரிகளும் பாதிக்கப்படும்நிலை உருவாகும். லாப நோக்கத்துக்காக ஒரு சில மீன் தரகர்கள் செய்யும் செயலால், ஒட்டுமொத்த மீனவர்களும் பாதிக்கப்படக் கூடாது. இந்தப் பிரச்னை தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. சந்தைகளில் விற்கப்படும் மீன்களைப் பொதுமக்கள் வாங்கிச் சாப்பிடலாம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!