எங்கள் போராட்டம் முடியப்போவதில்லை: நிர்பயாவின் தாயார்

,எங்கள் போராட்டம் முடியப்போவதில்லை, என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
 

நிர்பயா

Photo Credit: ANI

டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர மாதம் மருத்துவ மாணவி நிர்பயாவை, ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.  இந்தச் சம்பவத்தில்,கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண், பேருந்திலிருந்து சாலையில் தூக்கி எறியப்பட்டார். அதில், பலத்த காயமடைந்த மாணவி சாலை ஓரத்தில் உயிருக்குப் போராடினார். அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் டெல்லியை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், ராம்சிங், அக்‌ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரை கைதுசெய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியது. குற்றவாளிகள்  ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர்களில் ராம்சிங் என்பவன், திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றை இன்று தள்ளுபடி செய்தது. 

இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில்,“எங்கள் போராட்டம் முடியப்போவதில்லை. நீதி தாமதமாகிவருகிறது. இந்த சமூகத்தில் உள்ள இன்னும் பிற மகள்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கில் போட வேண்டும். நீதித் துறையின்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!