வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (09/07/2018)

கடைசி தொடர்பு:18:01 (09/07/2018)

`ஒரே கூட்டத்தொடரில் இத்தனை பட்டப்பெயர்களா?' - எடப்பாடியைப் புகழ்ந்த எம்.எல்.ஏ-க்கள்!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பல்வேறு பட்டங்களைச் சூட்டி புகழ் மழையில் நனையவைத்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கடந்த மே 29-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை குறித்து  மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில், முன் எப்போதும் இல்லாத அளவில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பல்வேறு பட்டங்களால் முதலமைச்சரை திணறடித்தனர். கடந்த காலங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரவையில் இருந்தபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவரைப் புகழ்பாடுவது வழக்கம். ஆனால் தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபின், ஜெயலலிதாவைப் பற்றி  புகழ்வது குறைந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வருக்கு சூட்டப்பட்ட பல்வேறு பட்டங்கள்...

 `சுற்றுச்சூழல் காத்த சூறாவளி'      
 `இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர்'
`சேலம் தந்த கொள்கைத் தங்கம்'
`சரித்திரப் பதிவேட்டில் சாமான்ய முதல்வர்'
`கள்ளமில்லா சிரிப்புக்குச் சொந்தக்காரர்'
`காலச்சரித்திரம் வழங்கிய சாமான்ய முதல்வர்'
`பொன் சிரிப்பில் எதிரியை ஈர்க்கும் எளிமையின் சின்னம்'
`நாடு போற்றும் நல்ல பண்பாளர்'
`சேலத்து மாங்கனி குடிமராமத்து நாயகன்'
`இந்தியாவின் இரண்டாம் இரும்பு மனிதர்'
`கொங்கு சீமையின் சீதனம்'
`சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் செம்மல்'
`நாசகார சக்திகளின் நச்சுகளை வீழ்த்திய கொங்குத் தங்கம்'
`எளிமையின் இலக்கணம்'
`கொங்குநாடு கண்டெடுத்த தங்கம்'
`தாயகம் காத்த தனிப்பெரும் தலைவன்'

இத்தனை பெயர்களும், இந்த ஒரு கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்குக்கூட இத்தனை பட்டப்பெயர்கள் சூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.