வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (09/07/2018)

கடைசி தொடர்பு:18:07 (09/07/2018)

`ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ - 3 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

`மக்கள் அதிகாரம் அமைப்பினரின் தூண்டுதலால்தான் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டோம்'' என  மீனவர்களும் மடத்தூர் கிராம மக்களும் கூறியதைத் தொடர்ந்து, ஆலையைத் திரும்பவும் திறக்க வேண்டும் என ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களே ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஸ்டெர்லைட்டை திறக்க 3 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த மே 22-ல் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. ஆலைகளிலிருந்து மூலப் பொருள்களான அமிலங்கள், காஸ், டீசல், ஜிப்சம் ஆகியவையும் கடந்த 15 நாள்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஸ்டெர்லைட்  ஆலையில் பணிபுரிந்து வந்த 1,900 நிரந்த பணியாளர்கள் 3,000 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுகமாக வேலை பெற்று வந்தவர்களும் வேலை இழந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆலையில் வேலை பார்த்தவர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதேபோல் இன்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,  குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து, வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தீபா பேசுகையில், “நான் வீரபாண்டியபுரத்துக்குத் திருமணமாகி வந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு எந்த நோயும் இல்லை. ஆலை இயங்கியது வரை எங்களுக்கு ஆலை சார்பாகக் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இப்போது கடந்த ஒரு மாதமாகக் கார்ப்பரேஷன் தண்ணீர்கூட வரவில்லை. ஆலையால் கிடைத்து வந்த சின்னச் சின்ன வேலைகளும் தற்போது இல்லாததால்,  குழந்தைகளுக்கு ஸ்கூலில் பீஸ் கட்டக்கூட முடியவில்லை. எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  

கிராம மக்களைப் போலவே, தூத்துக்குடி லாரி உரிமையாளர்களும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஆலைக்குத் தாமிர தாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி ஏற்றி வந்த 1000-க்கும் அதிகமான லாரிகள் வேலை இழந்துள்ளன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இல்லாததால், வீட்டு வாடகை, பிள்ளைகளின் படிப்பு, அத்தியாவசிய செலவு, வங்கிக் கடன்கள் கட்ட முடியாமல் தவிக்கிறோம். இதனால் ஆலையைத் திறக்க வேண்டும், இல்லை என்றால் எங்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்ய வேண்டும்' என மனு அளித்தனர்.

மக்கள் அதிகாரம் மற்றும் மற்றவர்களின் தூண்டுதலால்தான் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டோம் என  மீனவர்களும் மடத்தூர் கிராம மக்களும் கூறியதைத் தொடர்ந்து, ஆலையைத் திரும்பவும் திறக்க வேண்டும் என ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களே ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பது தூத்துக்குடியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க