`நடுரோட்டில் நின்ற அரசின் புதிய `அல்ட்ரா டீலக்ஸ்' பேருந்து'- ஒருவாரத்தில் பழுதான அவலம்!

தமிழக அரசால்  கடந்த வாரம் புதிதாக விடப்பட்டுள்ள மிதவைப்  பேருந்து, நடுரோட்டில் பழுதாகி நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிப்பேரான அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து

300 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் பல புதிய பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன் முதல்கட்டமாக, ரூ.134 கோடி செலவில் 515 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அந்த சேவையைக் கடந்த ஜூன் 3-ம் தேதியன்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அந்தப் பேருந்துகள், பல்வேறு போக்குவரத்துக் கோட்டங்களில் இயக்கப்பட்டுவருகின்றன.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்துக்கும்  சில பேருந்துகள் விடப்பட்டன. அவற்றில், திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை செல்லும் குளிர்சாதன மிதவைப் பேருந்து (Ultra Deluxe), இன்று காலை 6.30 மணிக்கு திருத்துறைப்பூண்டி பணிமனையில் இருந்து பயணிகளுடன் சென்னைக்குப்  புறப்பட்டது. பேருந்து, திருவாரூர் அருகே கூடூர் என்ற இடத்தில்  வந்துகொண்டிருந்தபோது, நடுவழியில் பழுதாகி நின்றது. நீண்ட நேரமாகியும்  பழுதைச் சரிசெய்ய முடியாததால், பயணிகள் மாற்றுப் பேருந்தில் சென்றுள்ளனர். புதிய பேருந்து வழங்கப்பட்டு ஒருவார காலம்கூட நிறைவடையாத நிலையில், இப்படி நடுவழியில் பழுதாகி நின்றது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து, பேருந்தை இயக்கிவந்த ஓட்டுநரிடம் கேட்டபோது, `எனக்கென்னாங்க தெரியும். வண்டியை எடுத்துட்டு போகச் சொன்னாங்க எடுத்துட்டு வந்தேன்'' என்று கூறிவிட்டு, வண்டியைப் பாதுகாக்கும் பணியைத் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!