`ஜாமீன் கிடையாது' - முத்ரா திட்டத்தில் கடன் பெற கலெக்டர் ஆபீஸில் குவிந்த பெண்கள்

முத்ரா திட்டத்தில் வங்கிகள் ஜாமீன் இன்றி எல்லோருக்கும் கடன் கொடுப்பதாக அறிவித்திருப்பதால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க திரண்டனர்.

முத்ரா திட்டத்தில் கடன் பெற மனு கொடுக்க திரண்ட பெண்கள்

மத்திய அரசு சிறு, குறு தொழில் முனைவோரை பெருக்கும் வகையில் 'முத்ரா' என்ற பெயரில் கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க விரும்புகிறவர்கள் வங்கிகளின் மூலம் ஜாமீன் இன்றி குறிப்பிட்ட அளவுள்ள தொகையைக் கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்து குறிப்பிட்ட சிலருக்கு  நிபந்தனைகளுடன்கூடிய கடன் தொகையை வங்கிகள் மூலமாக வழங்கிச் சென்றனர். இதில் சில பெண்களும் சுய தொழில் செய்வதற்காகக் கடன் பெற்றுள்ளனர்.

முத்ரா திட்ட கடன் கேட்டு மனு கொடுக்க வரிசையில் பெண்கள்
 

இந்நிலையில், கிராமத்துப் பெண்கள் அனைவருக்கும் ஜாமீன் ஏதும் இன்றி வங்கிகள் கடன் வழங்குவதாகவும் இதற்கென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுவதாகவும் தகவல்கள் பரவியது. இதையடுத்து கிராமப் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காகத் திரண்டனர். காலையிலேயே பல்வேறு கிராமங்களிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த பெண்கள் தங்களுக்குத் தெரிந்த, தெரியாத நபர்களை அணுகி கடன் கோரும் மனுக்களை எழுதிக்கொண்டு நீண்ட வரிசையில் வெயிலில் காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் குறைதீர் கூட்ட அரங்கத்தின் முன் இன்று கூடிய அளவுக்கதிகமான பெண்கள் கூட்டத்தைக் கண்ட மாவட்ட அதிகாரிகள் திகைப்படைந்தனர். கூடியிருக்கும் அனைவரையும் கூட்ட அரங்குக்குள் அனுமதித்தால் விடிய விடிய மனு வாங்க வேண்டியிருக்கும் எனக் கருதிய அதிகாரிகள் கூட்ட அரங்கைவிட்டு வெளியே வந்து அங்கு வரிசையில் நின்ற பெண்களிடம் மனுக்களைப் பெற்றுச் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!