காந்தியத் தம்பதியின் ஒரு லட்சம் கிலோமீட்டர் லட்சியப் பயணம்!

காந்தியத் தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ள காந்தி மியூசியம், காமராஜர் பல்கலைகழகம் நடத்துகிற  பாடங்களை கற்றோம். அதனூடே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினோம். 

காந்தியத் தம்பதியின் ஒரு லட்சம் கிலோமீட்டர் லட்சியப் பயணம்!

''இன்னும் 16, 550 கி.மீட்டர்தான் பாக்கி இருக்குங்கய்யா... அதையும் சுற்றி வந்து நிறைவு செய்துட்டோம்னா மகாத்மா காந்தியோட 150 பிறந்த தினமும், 71 வது சுதந்திர தினமும் வருகின்ற இந்த நேரத்துல அவருக்கும், நாட்டுக்கும் செய்கிற புண்ணியமா இருக்கும்னு நினைக்கிறோம். ஆனா, வயசாயிட்டதால முன்னா மாதிரி  சைக்கிள மிதிக்க  முடியலை.  வயித்து வலி வேறு வந்துட்டது. அதான் ஒரு மோட்டார் சைக்கிள் கிடைச்சா போதும், எங்கள் லட்சியத்தை நிறைவு செய்துவிடுவோம்'' என்கிறார்கள் காந்தியவழி தம்பதிகளான  கருப்பையாவும், சித்ராவும்.  

காந்திய தம்பதி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டி.ஆண்டிப்பட்டி பங்களா என்ற கிராமத்தை சேர்ந்த காந்திய வழி தம்பதிகளான கருப்பையா -சித்ரா ஆகியோர், நடைபயணமாகவும், சைக்கிளிலும் இந்தியா முழுவதும் சுற்றி வந்துள்ளார்கள். சமூக நல்லிணக்கம், தீவிரவாத எதிர்ப்பு, காந்திய சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக தங்கள் வருமானம், உடல் நலத்தைக் கூட பொருட்படுத்தாமல் கடந்த 18 வருடங்களில் இதுவரை 83,450 கி.மீ. தூரம் சுற்றி வந்துள்ளார்கள். எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல்,  விளம்பர நோக்கமில்லாமல், சத்தமில்லாமல் இந்தச் சாதனையை செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவருடைய உயர்ந்த நோக்கத்தை சமீபத்தில் கேள்விப்பட்டு சென்னையில் நடந்த மய்யம் கட்சிப் பாடல் வெளியீட்டு விழாவில் காந்தியவாதி கருப்பையாவுக்கு மரியாதைச் செய்திருக்கிறார் காந்தியத்தை தூக்கிப் பிடிக்கும் கமல். 

இவரைப்பற்றிய செய்திகள், கட்டுரைகள் எனப் பல மாநில ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது. கூகுளில் இவர் பெயரை டைப் செய்தால் பல தகவல்கள் வந்து விழுகின்றன. அடுத்த கட்ட பயணத்துக்கு தயாராகி வரும் காந்தியவாதி கருப்பையாவிடம் பேசினோம். ''என்னைப்பற்றி சொல்றதுக்கு பெருசா ஒண்ணுமில்லை. பள்ளியில் படிக்கிற காலத்தில் மகாத்மா காந்தி, அவருடைய சீடர் வினோபாவே உட்பட பல சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை படிக்கும்போதும், தியாக வாழ்க்கை வாழ்ந்த மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை படிக்கும்போதும் மனதை ரொம்பவும் பாதித்தது. மகாத்மா காந்தி போதித்த அன்பு, அஹிம்சை, சத்தியம்,சமாதானம் போன்றவைகளால் கவரப்பட்ட வெளிநாட்டவர் அதைத் தெரிந்து கொள்ள நம் நாட்டுக்கு வரும்போது, நம் நாட்டிலோ தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தலில் மக்கள் இருந்து வருகிறார்கள்.

காந்திய தம்பதி

இதையெல்லாம் பார்த்து மனம் வேதனைப்பட்ட நிலையில்தான் அஹிம்சை வழி போராட்டம் நடத்தி பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்திடவும், நம் மண்ணையும், பண்பாட்டையும் காக்கவும், அனைத்து மக்களும் சகோதர சகோதரி என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் கருத்தை மெய்பிக்கவும்  நானும் என் மனைவி சித்ராவும் காந்தியத் தத்துவங்களைக் கற்று, இந்தியா முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்ய முடிவெடுத்தோம்.

காந்தியத் தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ள காந்தி மியூசியம், காமராஜர் பல்கலைகழகம் நடத்துகிற  பாடங்களை கற்றோம். அதனூடே சமூக சேவைகளில் ஈடுபடத் தொடங்கினோம்.  அதன் பின்பு காந்தியச் சிந்தனைகளை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நானும் சித்ராவும் 2000-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ல் குமரி முதல் காஷ்மீர் வரையும், காஷ்மீரிலிருந்து குமரி வரையிலும், மதுரை முதல் வாகா எல்லை வரையும், நடந்தும், சைக்கிளிலும் மாறி மாறி பயணம் செய்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும், கிராமம், நகரம், தலைநகரம் என்று ஒன்றுவிடாமல் தேச ஒற்றுமை பிரசாரத்தையும், துண்டு பிரசுரங்களையும் வழங்கினோம்.

இதற்கு முன்பே மதுரை காந்தி மியூசியம் மூலம் ஐம்பது பேர்களுடன் 16 மாவட்டங்களில் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்த அனுபவமும் உள்ளது. என் மனைவி சித்ரா ஈரோடு மாவட்டத்தில் கவுந்தபடியைச் சேர்ந்தவர். அவர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு வரும்போதே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். காந்தியம் என்கிற ஒத்த சிந்தனையால் இருவரும் தம்பதியினரானோம். எங்கள் பிராசார பயணத்துக்காக அப்போது ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயணன் சிங், குமரி அனந்தன், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம் ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளோம்.

இதுவரை 83,450 கி.மீ. தூரம் சுற்றி வந்துவிட்டோம். அடுத்து மகாத்மாவின் 150 வது பிறந்த நாள் வருவதற்குள் மீதியுள்ள 16,550 கி.மீட்டர் தூரத்தைக் கடக்கும் வகையில் ஒரு பயணத்தைத் தொடங்கவுள்ளோம். அதன் மூலம்  ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதே நேரம், இந்தப் பயணச் செலவுக்கு எங்களுடைய உழைப்பில் கிடைக்கும் சிறு வருமானத்தையும், எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் கொடுக்கும் சிறு நன்கொடையாலும் இந்தப் பணியைச் செய்து வருகிறோம். சைக்கிள் மிதித்து  மிதித்து குடலிரக்க நோய் வந்து சிகிச்சை எடுத்தேன். மருத்துவர் இனி ஓய்வெடுக்க வேண்டும் என்றார். அதற்காக எங்கள் லட்சியப் பயணத்தை நிறுத்த முடியாது. சூப்பர் எக்ஸல் வாகனம் கிடைத்தால் போதும், அந்த இலக்கை எட்டி விடுவோம்'' என்றார் உற்சாகமாக.

காந்தியத்தை தவிர வேறு எந்த நோக்கமும் அவருடைய பேச்சில் இல்லை. இப்படியும் சில லட்சிய மனிதர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!