வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/07/2018)

`பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சர்ச்சை!’ - மன்னிப்பு கோரிய மேக்ஸ்வெல்

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பின்னர், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவுடன் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் கைகுலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது, நல்ல விளையாட்டு வீரருக்கு அழகல்ல என்பன போன்ற கண்டனங்கள் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு எதிராகக் குவிந்த நிலையில், தற்போது அந்தச் செயலுக்காக அவர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். 

மேக்ஸ்வெல்

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 தொடர், ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி, ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஷார்ட், 76 ரன்களும் கேப்டன் பின்ச் 47 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஃபகர் ஜமானின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் எட்டியது. ஜமான் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில், வெற்றிக்குப் பின்னர் வீரர்கள் கைகுலுக்கிக்கொள்ளும்போது, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவுக்குக் கைகொடுப்பதை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தவிர்த்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. கிளென் மேக்ஸ்வெல்லின் செயலுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்தனர். மேக்ஸ்வெல் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியிருந்தார். 

இந்த நிலையில், தனது செயலுக்கு மன்னிப்புக் கோருவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேக்ஸ்வெல், ``பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். ஃபகர் ஜமான் மற்றும் சோயப் மாலிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜிம்பாப்வே தொடரை சோகத்துடன் நாங்கள் முடித்திருக்கிறோம். இருப்பினும், அந்தத் தொடரில் இருந்து நேர்மறையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். போட்டிக்குப் பிந்தைய நிகழ்வுகள் விளையாட்டு உணர்வுக்கு எதிரானவை. அதேபோல, நான் விளையாடும் முறையும் அதுவல்ல. ஹோட்டலில் தற்போது சர்ஃப்ராஸைச் சந்தித்துக் கைகுலுக்கி, அவரது அணியின் வெற்றிக்கு வாழ்த்துக் கூற உள்ளேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.