வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/07/2018)

கடைசி தொடர்பு:20:20 (09/07/2018)

`உதயா அண்ணனுக்கு கட்சியில் சீக்கிரமே பொறுப்பு!’ -உற்சாகத்தில் தி.மு.க இளைஞரணி

``உதயநிதி ஸ்டாலின், விரைவில் தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு ஏற்க இருக்கிறார்.  அதற்கு முன்னோட்டமாகவே ஐந்தாம் தலைமுறையே என உதயநிதிக்கு இளைஞரணியைச் சேர்ந்த நாங்கள்  போஸ்டர் ஒட்டினோம். மூத்த நிர்வாகிகள்கூட முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உதயநிதிக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள்’’ என தஞ்சாவூர் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் உற்சாகமாக வலம் வருவதோடு, இதற்கான அறிவிப்பை தலைமை சீக்கிரமாகவே அறிவிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்.

தஞ்சாவூரில், கடந்த வாரம் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள, முதல் நாளே வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞரணி அமைப்பாளர்கள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். அதுமட்டுமில்லாமல், தஞ்சாவூரே திணறும் அளவுக்கு, 'இதயமே' 'உதயமே', 'ஐந்தாம் தலைமுறையே' என உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வரவேற்று போஸ்டர்கள் ஒட்டினர். இதைப் பார்த்து தி.மு.க-வினர் சிலரே, `ஸ்டாலினுக்குக்கூட இத்தனை வரவேற்பு இல்லையே?’ எனப் பேசிக்கொண்டனர்.

அதேபோல, திருமண நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றியவர்கள்,  உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்கள். திருமண அழைப்பிதழ்கள்கூட ஸ்டாலின் தலைமை மற்றும் உதயநிதி தலைமையில் திருமணம் நடக்க இருப்பதாக இரண்டு வகையான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன. இப்படி, உதயநிதிக்கான முக்கியத்துவத்தை எப்போதும் இல்லாத அளவுக்கு கட்சியினர் கொடுத்தனர். அதற்கு ஏற்றார்ப்போல, தன்னிடம்  மாற்றுத்திறனாளி ஒருவர் தன் மகனுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு ஏற்கெனவே கொடுத்த கடிதம் குறித்து, மன்ற நிர்வாகிகளிடம் விசாரிக்கச் சொல்லியிருந்தார் உதயநிதி. தஞ்சாவூர் வந்தவர், நேராக அவர் வீட்டுக்கே சென்று பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுத்ததோடு, `வேறு என்ன உதவி தேவைப்பட்டாலும், உடனே என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என மாற்றுத்திறனாளியிடம் வாஞ்சையாகக் கூறிவிட்டு வந்தாராம். மன்றம் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்தவர்களிடம், `சிறப்பாகச் செயல்படுகிறவர்களுக்கு, நல்லது சீக்கிரமே நடக்கும்’ என்றும் கூறி, உதயநிதி உற்சாகப்படுத்தினாராம். நடப்பு நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, விரைவில் உதயநிதிக்கு  மாநில இளைஞரணிச் செயலாளர்  பொறுப்பு கொடுக்கப்படும் என வெளிப்படையாகவே தி.மு.க-வினர் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க-வின் இளைஞரணி வட்டத்தில் பேசினோம். ``இப்போது இளைஞரணிச் செயலாளராக முன்னாள் அமைச்சரான ம.பெ.சுவாமிநாதன் இருக்கிறார். அவர், சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தளபதி, சென்னையில் மாவட்டம்தோறும் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின்போதே, இளைஞரணியைச் சேர்ந்த பலர் `உதயா அண்ணனுக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுங்க’ என கோரிக்கை வைத்தோம். காரணம் என்னவென்றால், வயசு வித்தியாசம் இல்லாமல், இளைஞரணியில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். கலைஞர் குடும்பத்தில் இருந்தே ஒருத்தர் முக்கியப் பதவிக்கு வரும்போது, எங்களைப் போன்றவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை பிறப்பதோடு, பெரிய உத்வேகத்தையும் கொடுக்கும். கட்சியில் உழைக்கிறவங்களுக்கு, அதற்குரிய பொறுப்பும் மரியாதையும் நிச்சயம் கிடைக்கும் என ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். உதயநிதியும் கட்சி நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம் என அனைத்திலும் கலந்துகொண்டு வருகிறார். நாங்கள், உதயா அண்ணனை இளைஞரணிச் செயலாளராக ஏற்றுகொண்டுவிட்டோம். முறைப்படி தளபதிதான் அறிவிக்க வேண்டும். அதனால்தான், பெரியாரில் தொடங்கி உதயநிதி வரை ஒப்பிட்டு, ஐந்தாம் தலைமுறையே என போஸ்டர் ஒட்டினோம்.  'உதயநிதி மாநில இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார்' என்ற அறிவிப்பு, தலைமையிடத்திலிருந்து வரும் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்’’ என்றனர் உற்சாகத்துடன்.

மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கட்சி நிர்வாகிகள் பலர்,உதயநிதிக்கு பொறுப்பு கொடுங்க என கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ஸ்டாலின், 'கட்சிக்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்பு தானாகத் தேடிவரும்' என உதயநிதிக்கு சின்ன சமிஞ்ஙைகூட காட்டாமல் இருக்கிறார். ஆனால் கட்சியினர், உதயநிதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பார்க்கிறார். அதோடு, தி.மு.க-வில் இளைஞர்கள் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாகத் தொடர்ந்து பேச்சு எழுந்தபடியே இருக்கிறது. எனவே, இளைஞர்களைப் பெருமளவில் ஈர்க்க வேண்டும். இளைஞரணிக்கு புதிய எழுச்சி கொடுக்க வேண்டும். அதற்காக, இளைஞரணி பொறுப்பை உதயநிதிக்கு கொடுக்கும் முடிவில் இருக்கிறார். அதற்காக, முதலில் களத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நிர்வாகிகள் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். அதற்காக, காவிரியின் உரிமைக்காக நடைபெற்ற நடைப் பயணத்தின்போது, கூடவே உதயநிதியையும் அழைத்துவந்தார். தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார். தகுந்த சமயத்தில்  உதயநிதியை மாநில இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலின் அறிவிப்பார். அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். ஆனால், அந்த பொறுப்புக்கு உதயநிதி வருவார் என்பது மட்டும் உறுதி’’ என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க