வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/07/2018)

கடைசி தொடர்பு:21:05 (09/07/2018)

6-ம் வகுப்பு மாணவனின் உயிரைப் பறித்த பள்ளிக் கட்டடம்!

உசிலம்பட்டி அருகே, பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், பள்ளி மாணவர் உயிரிழந்தார். தரமற்ற கட்டடத்தால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .

உயிரிழப்பு

உயிரிழந்த மாணவர் ராகவன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்த மாணவர், ராகவன். நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பள்ளியின் அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளிக் கட்டடத்தின் மாடியில் பந்து விழுந்ததாகவும், அதை எடுக்க ராகவன் பள்ளிக் கட்டடத்தின்மீது ஏறியபோது, கட்டடம் இடிந்து மாணவன் மீது விழுந்தாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மாணவரை அருகில் இருந்தவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ராகவன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி தாலுகா போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும், கட்டடம் கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள்கூட ஆகாத நிலையில், தரமற்ற கட்டடம் கட்டப்பட்டதாலேயே, இந்த விபத்து ஏற்பட்டதாவும், மாணவ மாணவியரின் எதிர்காலத்தைக் காக்க அதிகாரிகள், ஆய்வுசெய்து தரமான கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தரமற்ற கட்டடத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.