வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (09/07/2018)

கடைசி தொடர்பு:21:00 (09/07/2018)

குடிநீர் வேண்டி தள்ளுவண்டி, குடங்களோடு மனு அளித்த பெண்கள்!

 குடிநீர் வசதி செய்துத் தர வேண்டி தண்ணீர் எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி - குடங்களுடன் திரண்டு வந்த கிராமப் பெண்கள், ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.

குடிதண்ணீர்
 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவுக்கு உட்பட்டது தனிச்சியம் ஊராட்சியைச் சேர்ந்த டி.கிருஷ்ணாபுரம். இங்கு சுமார் 500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், முறையான குடிநீர் வசதியில்லை. 10 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் காவிரி குடிநீரும் முழுமையாக வருவதில்லை. இதனால் இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டிகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அவ்வாறு தண்ணீர் எடுக்கவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இரவு நேரங்களிலும் தண்ணீர் எடுக்க சென்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் தள்ளுவண்டிகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சாலை ஓரம் சென்று கொண்டிருந்த பெண்கள்மீது வாகனம் ஒன்று மோதியதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் பலத்த காயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.  

இதையடுத்து, தங்கள் கிராமத்தின் குடிநீர் தேவையைத் தீர்க்க உப்பு நீரை நன்னீராக்கும் திட்டத்தைத் தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பச்சமால் தலைமையில் டி.கிருஷ்ணாபுரம் மகளிர் மன்றத்தைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் குடிநீர் எடுத்து வர பயன்படுத்தும் தள்ளுவண்டி மற்றும் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.