`அன்று ரூ.151 கோடி; இன்று 246 கோடி!’ - எடப்பாடி பழனிசாமி வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்’ | 251 crore rupees deposited in Tiruchencode co-op society bank during demonetisation: Sources

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (09/07/2018)

கடைசி தொடர்பு:15:13 (12/07/2018)

`அன்று ரூ.151 கோடி; இன்று 246 கோடி!’ - எடப்பாடி பழனிசாமி வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்’

நாமக்கல் கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனத்தில் நடக்கும் ரெய்டின் அடுத்தகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக இருக்கும் `கூட்டுறவு' இளங்கோவனைக் குறிவைத்துள்ளது வருமான வரித்துறை. `பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, கூட்டுறவு வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது, யாருடைய பணம் என்பதில்தான் இந்த ரெய்டின் நோக்கம் அடங்கியிருக்கிறது' என்கின்றனர் சேலம் மாவட்ட அ.தி.மு.க-வினர். 

கிறிஸ்டி நிறுவனம்

திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில், ஐந்தாவது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு, கொங்கு மண்டல அ.தி.மு.க-வினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசின் சத்துணவுத் திட்டத்தின்கீழ் ஊழல் நடப்பதாகத் தகவல்கள் வெளிவருவதை ஆட்சியில் உள்ளவர்கள் விரும்பவில்லை. நேற்று, சென்னையிலிருந்து திருச்செங்கோடு அழைத்துச் செல்லப்பட்ட கிறிஸ்டி ஃபுட்ஸ் உரிமையாளர் குமாரசாமியிடம் ரகசிய விசாரணை நடத்திவருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இந்த விசாரணையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது 246 கோடி ரூபாயைக் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக இருப்பவரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவருமான இளங்கோவனையும் குறிவைத்து விசாரணை நகர்ந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், ``ஜெயலலிதா இறந்த பிறகு, எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து நடக்கும் மூன்றாவது சோதனை இது. கடந்த 2016 டிசம்பர் 23-ம் தேதி, சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக, 151 கோடி ரூபாய்  கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. 

இளங்கோவன்சேலம் மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடந்தபோதே, 65 கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைத்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. `ரூபாய் நோட்டுகள் செல்லாது' என மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, புதிதாகத் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தனர். சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பெயரில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதன் பின்னணியை விசாரித்தனர். இவற்றின் மூலம் 151 கோடி ரூபாய் அளவுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் பிடிபட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஐந்தாண்டுகளாக அரசுத் திட்டங்களில் சம்பாதித்த பணத்தை, இந்த வழிகளில் முதலீடு செய்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரம், அடுத்து வந்த நாள்களில் காணாமல் போய்விட்டது. 151 கோடி ரூபாய் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அடுத்ததாக, ஆர்.கே.நகர் தேர்தலில் பண விநியோகம் செய்த புகாரில் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அமைச்சர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்கான ஆவணங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த விவகாரமும் அடுத்து வந்த நாள்களில் அமுங்கிப்போனது. இப்போது, குமாரசாமியை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்டம் காட்டி வருகிறது வருமான வரித்துறை" என விவரித்தவர், 

``தற்போது குமாரசாமியிடம் நடந்துவரும் விசாரணையில், சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட திருச்செங்கோடு கூட்டுறவு வங்கியில், தனிநபர் கணக்கில் 246 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதே வங்கியில், 800 நபர்களின் பெயர்களில் 10 லட்சம் முதல் 50 லட்சம்  ரூபாய் வரை போடப்பட்டிருக்கின்றன. கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திவரும் நிலையில், அந்த வங்கியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். எனவே, இந்த 246 கோடி ரூபாயும் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் பணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஆட்சியில் இருந்தவர்கள், கறுப்புப் பணத்தைக் கூட்டுறவு வங்கியின் கணக்கில் போட்டிருக்கலாம். இந்த வங்கியின் தலைவராக இருப்பவர், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன். சேலம் மாவட்டத்தில் நிழல் முதல்வராகவே இவர் வலம் வருகிறார். இவரைக் குறிவைத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் காய் நகர்த்தி வருவது கோட்டை வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது" என்றார் விரிவாக. 

இதுகுறித்து மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனிடம் விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டபோது, 'அவர் மீட்டிங்கில் இருக்கிறார்' எனத் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர், "கூட்டுறவு வங்கியைக் குறிவைத்து வெளியாகும் தகவல்கள் தவறானவை. எந்த வகையிலும் தவறு நடக்க வாய்ப்பில்லை. அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் எங்கள் பணி. வங்கிகளின் நிர்வாகத்தில் நிர்வாக இயக்குநர்கள், மேலாளர்கள் எனப் பல படிநிலைகளில் அதிகாரிகள் உள்ளனர். இதில் எந்த வகையிலும் தவறு நடக்க வாய்ப்பில்லை. பொதுமக்கள் அதிக அளவில் டெபாசிட் செய்துவருகின்றனர். எங்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுவதாகச் சொல்லப்படுவதும் தவறு" என்றார். 
 

இதுகுறித்து மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் விரிவான விளக்கம் அளித்தால், பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.