வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (09/07/2018)

கடைசி தொடர்பு:19:31 (09/07/2018)

`இளைஞருக்குத் தெரியாமல் கிட்னி திருடப்பட்டதா?’ - மதுரை பரபரப்பு

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பக்ரூதீன் என்ற இளைஞரிடம் அவர் உறவினர், ரத்தம் கொடுப்பதற்காக அழைத்துச்சென்று, அவருக்கே தெரியாமல் கிட்னியை எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம், தற்போது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பக்ருதீன்


பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், நியாயம் கேட்டு மதுரை எஸ்.பி-யிடம் இன்று மனு கொடுத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பக்ருதீன், ''கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் என் வீட்டுக்கு வந்த என் உறவினர் ராஜாமுகமது என்பவர், தன்னோட அக்கா பையனுக்கு  உடம்பு சரியில்லை, அவனுக்கு ரத்தம் தேவைப்படுதுன்னு சொல்லி என்னிடம் ரத்தம் எடுப்பதற்காக சாஸ்தா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அதற்கு முன்பு, சில பேப்பர்களில் என் அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அந்த மருத்துவமனையில், எனக்கு ரத்தத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்றும், அதனால் என்னை அங்கு  தங்கியிருந்து வைத்தியம்பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். சில நாள்கள் கழித்து, என்னால் முன்புபோல இருக்க முடியவில்லை, அடிக்கடி மயக்கம் வரும், அப்போதுதான் இடுப்பில் இருந்த காயத்தைப் பார்த்த என் அம்மாவுக்கு சந்தேகம் வந்தது. உடனே  அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் செக் பண்ணினோம். அப்போதுதான், என்னுடையை கிட்னியை எடுத்ததுவிட்டது தெரியும். உடனே, அந்த ராஜமுகமதுவிடம் என் அம்மா, `இப்படி பண்ணிட்டியே?’ என்று சண்டை போட்டார். அதற்கு, பிரச்னை வேண்டாம், 10 லட்ச ரூபாய் பணம் வங்கித் தருகிறேன்,  உன் தங்கை திருமணச் செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்றார். அவர்மீது புகார் கொடுத்தோம், அதற்கு அவர் வரவில்லை. அதன் பின்னர்தான் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்துள்ளோம்'' என்றார். 

பக்ருதீன்

இப்படி, பக்ருதினும் அவரது தாயாரும் குற்றம் சாட்டினாலும், இவ்வளவு நாள்கள் கழித்து இவர்கள் புகார் எழுப்ப என்ன காரணம்? பணத்துக்காக பக்ருதீன் குடும்பத்தினர்  கிட்னி கொடுக்க சம்மதித்தார்களா, சொன்னபடி பணம் கொடுக்காததால் இப்போது புகார் கொடுக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் நடந்தபோது பக்ரூதீனுக்கு 17 வயது என்று சொல்லப்படுகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதற்கு கடுமையான விதிகள் இருக்கும் நிலையில், இதைச்செய்த அந்த மருத்துவமனை மருத்துவர்களும் விசாரிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க