வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (09/07/2018)

கடைசி தொடர்பு:21:15 (09/07/2018)

``ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 16.17 கோடி ரூபாய் மருந்துகள் காலாவதி!’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சி #VikatanExclusive

அளவுக்கு அதிகமாக வாங்கியதால் 16.17 கோடி ரூபாய் மருந்துகள் காலாவதி. தணிக்கைத்துறை அறிக்கையில் ஊழல் அம்பலம். 

``ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 16.17 கோடி ரூபாய் மருந்துகள் காலாவதி!’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சி #VikatanExclusive

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு காலாவதியானதால் 16.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட தகவல் இது.

அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை அரசின் பொதுத்துறை நிறுவனமான `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்'தான் விநியோகிக்கிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ்தான் இது செயல்படுகிறது. மருத்துகளைக் கொள்முதல் செய்து, தமிழகம் முழுவதும் 29 இடங்களில் உள்ள மருத்துவக் கிடங்குகளில் சேமித்து வைத்து விநியோகம் செய்கிறது `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்.' அவசியமான மருந்து மற்றும் சிறப்பு மருந்துப் பட்டியல்களையும் `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்'தான் பராமரித்தும் வருகிறது.

மருத்துவமனை மருந்துகள் 

அவசியமான மருந்துப் பட்டியலில், புதிதாகச் சேர்க்கப்பட்ட 45 மருந்துகளின் தேவைகளுக்காக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' அழைப்பு விடுத்தது. மருத்துவக் கல்வி இயக்குநர், தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள 37 மருத்துவமனைகளிடமிருந்து அவர்களின் தேவைகளைப் பெற்று, 2013 டிசம்பர் 13-ம் தேதி தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகத்துக்கு அனுப்பியது.

Tacrolimus Capsule 1 mg மற்றும் Bromocriptine Tablet 2.5 mg ஆகிய மருத்துகள் உள்ளடக்கிய பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்டது. 37 மருத்துவமனைகளுக்கும் சேர்த்து, இந்த மருந்துகளின் தேவைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த தேவைகளில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையின் தேவை 82 மற்றும் 99 சதவிகிதம். 2014 ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மருந்துகள், `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்தால் கொள்முதல் செய்யப்பட்டன. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள், 2016 ஜூன் மற்றும் செப்டம்பரில் காலவதியான மருந்துகளின் மதிப்பு 14.25 கோடி ரூபாய் ஆகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளில், முந்தைய ஆண்டின் ஒட்டுமொத்த பயன்படான 5.46 லட்சம் Tacrolimus Capsule 1 mg குப்பிகள் மற்றும் 7,000  Bromocriptine 2.5 mg  மாத்திரைகளுக்கெதிராக மருத்துவப் பண்டக அதிகாரி 1.80 கோடி Tacrolimus Capsule 1 mg குப்பிகள் மற்றும் 96 லட்சம் Bromocriptine 2.5 mg மாத்திரைகளைத் தனது தேவைகளாகத் தெரிவித்திருந்தார். கோரப்பட்ட மருந்துகளின் அளவு தேவைக்கு மிகவும் அதிகமானது என்றும் 100 மாத்திரைகள் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை மாத்திரைகளின் எண்ணிக்கை எனக் கருத்தில் கொண்டு கவனக்குறைவாக மருத்துவப் பண்டக அதிகாரி தேவைக்கு அதிகமாகக் கோரினார் என்றும் ராஜீவ் காந்தி மருத்துமனையின் முதல்வர் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அளித்த தன்னுடைய கடிதத்தில் ஒப்புக்கொண்டார். இது தேவையைவிட 100 மடங்கு அதிகமாக இருந்தது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரால் இரண்டு பேராசிரியர்களைக் கொண்டு, அமைக்கப்பட்ட ஒரு விசாரணை, `இந்த நிகழ்வு மனிதப் பிழையால் ஏற்பட்டது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளதல்ல. இவ்வழக்கு விவரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்' எனப் பரிந்துரை செய்தது. ஆனாலும், விசாரணைக் கண்டுபிடிப்புகளின்படி எவ்வித மேல் நடவடிக்கையும் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படவில்லை.

மருந்துகள் அறிக்கை

மருத்துவப் பண்டக அதிகாரியால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு அலுவலக கோப்பில் முதல்வரின் அனுமதி பெறப்படவில்லை. மருத்துவப் பண்டக அதிகாரியால் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்ட தேவைகளில் முதல்வரின் கையொப்பமும் இல்லை. மருத்துவப் பண்டக அதிகாரியின் கையொப்பமும் இல்லை. மேலும் மருத்துவக் கல்வி இயக்குநர், முதல்வரின் கையெழுத்துக்கு வலியுறுத்தவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரின் கையொப்பத்துக்கும் வலியுறுத்தவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரின் அனுமதியின்றி வழங்கப்பட்ட தேவைகளை, ஒப்புக்கொண்ட மருத்துவக் கல்லூரி இயக்குநரின் தவறு. முதல்வரின் சரிபார்த்தலும் செல்லுபடியாக்கலுமின்றி அதிகரிக்கப்பட்ட தேவைகளை ஒப்புக்கொள்வதில் முடிந்தது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையால் மதிப்பீடு செய்யப்பட்டபடி, கோரப்பட்ட Tacrolimus குப்பிகள் மற்றும் Bromocriptine மாத்திரைகளின் மதிப்பு முறையே 10.15 கோடி ரூபாய் மற்றும் 8.70 கோடி ரூபாயாகும். மருந்துகளின் உயர் மதிப்பு மற்றும் முந்தைய ஆண்டின் குறைவான பயன்பாடு ஆகியவற்றின்போதும், ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையால் வழங்கப்பட்ட அசாதாரண தேவைப்பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் ஆய்வு செய்யவில்லை. இது இந்த மருந்துகளின் தேவைப்பாட்டை ஒருங்கிணைப்பதிலும் சரிபார்ப்பதிலும் மருத்துவக் கல்வி இயக்குநரின் கவனக் குறைவைச் சுட்டிக்காட்டுகிறது.

'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' கடந்த ஆண்டின் பயன்பாட்டை தேவைப்பட்டியலுடன் சரிபார்க்க ஒரு வாய்ப்பிருந்தும் இந்த மருந்துகளின் தேவைப்பாட்டை மதிப்பிடுவதில், அதன் பங்கை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. எனினும், கடந்த ஆண்டுகளின் பயன்பாடுகளின் அடைப்படையில் கொள்முதலுக்கான எண்ணிக்கையை முடிவு செய்வது எனும் நடைமுறையிலிருந்து மாறுபட்டதன் காரணமாகத் 'தமிழ்நாடு மருத்துவக் பணிக் கழகம்', தேவைப்பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரிடம் கோரியது. இந்த நெறிமீறல் 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்தின் நிர்வாக இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்டது. இவையெல்லாம் அதிகக் கொள்முதலுக்கு பங்களித்தது.

'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' ஜூன் 2014-ல் தனது முதல் கொள்முதல் ஆணையை வழங்கியது. நடைமுறைப்படி, ஆறு மாத காலத்துக்குத் தேவையான மருந்துகளுக்குக் குறைவான மருந்துகள் கையிருப்பில் இருந்தால் மட்டுமே, இரண்டாவது கொள்முதல் ஆணை முன்வைக்கப்பட வேண்டும். எனினும், கணினி மூலம் கணக்கிடப்பட வேண்டிய அடிப்படை முறையைப் புறக்கணித்து மருத்துகளின் கையிருப்பு ஆறு மாதத் தேவைகளுக்குக் குறைவாகும் முன்னரே 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' இரண்டாவது கொள்முதல் ஆணையை வெளியிட்டது. 

மருந்துகள்

நான்கு மாத தேவைகளுக்குக் கொள்முதலைக் கட்டுப்படுத்துவதே 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்'த்தின் கொள்முதல் கொள்கையாகும். எனினும், அரசு மருத்துமனைகளால் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளைக் கண்காணிக்காமல், 2014 ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையே மொத்த மருந்துகளையும் கொள்முதல் செய்யப்பட்டதிலிருந்து, இக்கொள்கை 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்தால் பின்பற்றப்படவில்லை என்பது புலனாகிறது.

விவாதிக்கப்பட்ட இரண்டு மருந்துகளைத் தவிர புதிதாகச் சேர்க்கப்பட்ட 45 மருந்துகளில், மேலும் ஐந்து மருந்துகள் கணிசமான அளவு அதிக கொள்முதல் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகள் தேவைப்பாட்டுக்கு அதிகமாகத் தேவைப்பட்டியல் அளித்ததால், முந்தைய ஆண்டு பயன்பாட்டைவிட 24 முதல் 189 மடங்கு வரை அதிகக் கொள்முதல் செய்யப்பட்டன. கல்லூரி கல்வி இயக்குநரும் பயன்பாட்டு முறையீடுடன் ஒப்பிட்டு, தேவைப்பாட்டைச் சரிபார்க்காமல் 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்துக்கு மேலனுப்பியது, மருந்துகள் காலாவதியானதிலும் அதைத் தொடர்ந்து 1.92 கோடி இழப்பு ஏற்பட்டதிலும் முடிந்தது. 

எனவே, மருத்துவப் பண்டக அதிகாரி வழங்கிய அதிகரிக்கப்பட்ட தேவைப்பட்டியல், வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை மருத்துவக் கல்லூரி இயக்குநர் பின்பற்றாதது, மருந்துகளின் தேவைப்பாட்டைச் சரிபார்ப்பதில் கவனக்குறைவு, பயன்பாட்டு முறையைச் சரிபார்ப்பதில் 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகத்தின் தவறு மற்றும் நான்கு மாதத் தேவைக்குக் கொள்முதல்களைக் கட்டுப்படுத்தாதது ஆகியவை 16.17 கோடி ரூபாய்க்கு இழப்புக்கு வழிவகுத்தது.

மருந்துவமனைகளால் வழங்கப்பட்ட தேவைகளின் அடிப்படையிலேயே மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. முந்தைய பயன்பாட்டுக்கான தரவுகள் இல்லாததால் முந்தைய பயன்பாட்டுடன் ஒப்பிட முடியவில்லை என அரசு பதில் அளித்தது. வருங்காலத்தில் இதுமாதிரி குறைபாடுகளைத் தடுப்பதற்காக ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் தலைமையில் தனது அலுவலகத்தில் ஒரு புதிய பிரிவை உருவாக்க கல்லூரி கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் முந்தைய பயன்பாட்டின் அடிப்படையில் தேவைப்பாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட நகலை மருத்துமனைகளின் முதல்வர்கள் வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்படும் எனவும் அரசு மேலும் தெரிவித்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்