ராமேஸ்வரம் கோயிலின் உறுதித்தன்மை: சென்னை ஐ.ஐ.டி குழு ஆய்வு

 300 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமை கொண்ட ராமேஸ்வரம் கோயிலின் பிராகாரங்களில் உள்ள தூண்களின் உறுதித்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வுசெய்தனர்.

ராமேஸ்வரம் கோயிலில் ஐ.ஐ.டி ஆய்வு

சென்னை ஐ.ஐ.டி-யில் இயங்கிவரும் பாரம்பர்ய மையங்களின் பாதுகாப்புக்கான தேசிய மையத்தின் சார்பில் நாட்டில் உள்ள பாரம்பர்ய சின்னங்கள், கோயில்கள், வரலாற்று கட்டமைப்புகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் கோயிலிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசுவாமி கோயில் 12-ம் நூற்றாண்டில் கூரை கொட்டகையாக இருந்துவந்தது. இதன் தொடர்ச்சியாகப் பல நூற்றாண்டுகளில் பலரது முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு கோபுரங்களுடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. கோபுர அமைப்பும் அடுக்கடுக்கான பிரகாரங்களும் சேதுபதி மன்னர்களின் முயற்சியால் உலகப் புகழைப் பெற்றுள்ளது. கோயிலின் இரண்டாம் பிராகாரப் பகுதி கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் முழுமை அடைந்த நிலையில் வடக்குப் பகுதி மட்டும் நிறைவு பெறாமல் பழைய சுண்ணாம்புக் கற்களாலான நிலையிலேயே உள்ளது. உப்புக்காற்று மற்றும் தீர்த்தங்களால் ஏற்படும் ஈரம் ஆகியவற்றால் இந்தப் பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் உறுதி தன்மை குறித்து ஆய்வு

 இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி-யின் தொழில்நுட்ப பொறியாளர்களும் முதுநிலை திட்ட அலுவலர்களுமான டாக்டர்  தமழி, கற்பகம் ஆகியோர் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தூண்கள் மற்றும் மண்டபத்தை ஆய்வு செய்து சென்றனர். இதன் தொடர்ச்சியாகச் சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து வந்திருந்த முதுநிலை திட்ட அலுவலர் கற்பகம், திட்ட அலுவலர் சுதாகர், தொழில்நுட்பவியலாளர் மதன் மற்றும் கட்டுமான வடிவமைப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தூண்களை அல்ட்ரா சோனிக் முறையில் இன்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு குறித்து முழுமையான அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட பின் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆய்வின்போது இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!